எச்சில் துப்பும் பொழுது காவலர் மீது பட்டதாக மாநகர போக்குவரத்து கழக நடத்துநர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் ஜான் லூயிஸ். இவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக சென்ற மாநகரபேருந்து நடத்துநர் பாலச்சந்திரன் எச்சிலை துப்பியுள்ளார். அப்பொழுது உமிழ்நீர் காவலர் மீது பட்டதாக பாலச்சந்திரனுடன் காவலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்பொழுது அவர் தரக்குறைவாகப் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் வாக்குவாதம் முற்றி பாலச்சந்திரனை காவலர் தாக்கியுள்ளார். நடத்துநர் சரமாரியாக தாக்கப்பட்டதால் மூக்கில் ரத்தம் ஒழுகியது. இந்த சம்பவம் நேற்று பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " பொது இடத்தில் எச்சில் துப்பியது பற்றி பாலச்சந்திரனிடம் காவலர் ஜான் லூயிஸ் கேள்வி கேட்டதாகவும், புகாருக்குள்ளான காவலர் பணியிடை நீக்கம் செய்ய உள்ள நிலையில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது"எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.