ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சிறிய அளவிலான சேமிப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் சீட்டு நிதியங்களின் ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கரூர் மாவட்ட பைனான்ஸ் மற்றும் சிட்பண்ட்ஸ் சங்க நிர்வாகிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்ட பைனான்ஸ் மற்றும் சிட்பண்ட்ஸ் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் வித்யாசாகர் தலைமை வகித்தார். இதில், செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் ராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது தலைவர் வித்யாசாகர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “சீட்டு நிதியங்களின் சேவை வரி 12 சதவீதத்தில் இருந்து, 18 சதவீதமாக தற்போது உயர்த்தப்பட்டு உள்ளது. கரூர் மாவட்டத்தில் சுமார் 100 சிட்பண்ட்ஸ் நிறுவனங்கள் உள்ளன. இதில் 20 ஆயிரம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். சீட்டு நிதியங்களில் பெரும்பாலும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்கள் சிறிய அளவிலான சேமிப்புகளைக் கொண்டு தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ளும் வகையில், இதில் பயன்பெற்று வருகின்றனர். இந்தநிலையில், சேவை வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது அவர்களின் சேமிப்பை கேள்விக்குறியாக்கும் செயலாக உள்ளது. எனவே மறு பரிசீலனை செய்து சேவை வரியை குறைக்கவும், விலக்கு அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.