Aruna IAS took charge as the 43rd Collector of Pudukkottai District

தமிழக அரசின் சார்பில் அவ்வப்போது பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில்அண்மையில் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா கடந்த 16 ஆம் தேதி (16.07.2024) உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த மெர்சி ரம்யா மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக அருணா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம் 1974 இல் உருவாக்கப்பட்டு தற்போது 51வது ஆண்டில் உள்ளது. மாவட்டத்தின் முதல் ஆட்சித் தலைவராக சி.ராமதாஸ் ஐ.ஏ.எஸ் 1974 ஜனவரி 14 இல் பதவி ஏற்று 3 மாதங்கள் பணியில் இருந்துள்ளார். தொடர்ந்து இதுவரை 42 மாவட்ட ஆட்சியர்கள் பணியில் இருந்துள்ளனர். தற்போது 43 வது மாவட்ட ஆட்சியராக அருணா ஐஏஎஸ் இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.

கடந்த 5 ஆண்டுகளில் உமாமகேஸ்வரி, கவிதா ராமு, மெர்சி ரம்யா என 3 பெண் மாவட்ட ஆட்சியர்களே பணியாற்றி வந்த நிலையில் தற்போது தொடர்ந்து 4 வது பெண் மாவட்ட ஆட்சியராக அருணா ஐ.ஏ.எஸ் பதவி ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.