பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகளின் வெங்காயம் சார்ந்த தொழில் மையம் அமைக்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் பெரம்பலூர் எம்.பி அருண் நேரு வலியுறுத்தியுள்ளார்.
பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி உறுப்பினர் அருண் நேரு, மத்திய உணவு பதப்படுத்தல் துறை அமைச்சர் சிராஜ் பஸ்வானிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அவர் கொடுத்துள்ள மனுவில், ‘தமிழகத்தில் கிராமப்புறங்கள் அதிகம் உள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் அதிக அளவில் வசிக்கின்றனர். மனித மேம்பாட்டு அறிக்கை 2017ன் படி தனிநபர் வருவாய் அடிப்படையில் வாழ்க்கை தரத்தில் 31 வது மாவட்டமாக பெரம்பலூர் உள்ளது. இங்கு 1,0 2,843 ஹெக்டேர் அளவுக்கு சாகுபடி பரப்பு உள்ளது. சோளம், வெங்காயம், நெல், மஞ்சள், மிளகாய், தக்காளி, கத்தரிக்காய், எலுமிச்சை, நிலக்கடலை, சூரியகாந்தி மற்றும் எள் ஆகியவை சாகுபடி செய்யப்படுகிறது.
இங்குள்ள பருவநிலை, மண்ணின் தன்மை ஆகியவை சிறிய வெங்காய சாகுபடிக்கு ஏற்றதாக அமைந்துள்ளது. இதனால் தரமான சிறிய வெங்காயம், அதிக அளவில் உற்பத்தி செய்ய முடிகிறது. மேலும், இந்த மண்டலத்தின் 2,200 கோடி மதிப்பிலான சிறிய வெங்காயம் உற்பத்தி செய்யும் அளவுக்கு சந்தை வாய்ப்பு பெரிதாக உள்ளது. சிறிய வெங்காயம் உற்பத்தி செய்யும் சாகுபடியாளர்கள் போதிய கிடங்கு வசதி மற்றும் உட்கட்டமைப்பு வசதி இல்லாததால் பெரும் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். தமிழகத்தில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் மாவட்டமாக பெரம்பலூர் இருக்கிறது. இருந்தாலும் விவசாய நில அறுவடைக்கு பின் பெரும் இழப்பை சந்தித்து வருகிறார்கள். பதப்படுத்துதல் மற்றும் உணவுப் பொருட்களை பாதுகாத்து வைக்க போதிய இட வசதியின்மையால் 16 சதவீத முதல் 35 சதவீதம் வரை உற்பத்தியில் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.
போதிய பாதுகாப்பு வசதி இல்லாததால், உற்பத்தி செய்த விவசாய பொருட்களை இடைத்தரகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு மிகக் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய பரிதாப நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால், இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு தீர்வு காண பெரம்பலூர் மாவட்டத்தில் வெங்காயம் சார்ந்த தொழில் மையம் அமைக்க வேண்டும். இந்த மையத்தில் சிறிய வெங்காயம், சோளம் போன்றவற்றை பதப்படுத்த முக்கியத்துவம் தரப்பட வேண்டும்.
இதனால் அறுவடைக்கு பின் ஏற்படக்கூடிய இழப்பு குறையும், உற்பத்தி பொருளுக்கும் நியாயமான விடை கிடைக்கும், விவசாயிகளுக்கான வாழ்வாதாரமும் பெருகும், கிடங்கு வசதியால் உற்பத்தி செய்த பொருட்களின் தரம் மேம்படும். அறுவடைக்கு பின் ஏற்படக்கூடிய இழப்பு குறைவதால் விவசாயிகளின் லாபம் அதிகரிக்கும். சமூக பொருளாதாரத்தின் நிலை மேம்படும் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். சாலை குடிநீர் விநியோகம் மற்றும் மின் வசதியை உறுதி செய்வதன் மூலம் அடிப்படை வசதிகள் விவசாயிகளுக்கு கிடைக்கும். அதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் சிறிய வெங்காயம், சோளம் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுவதை கருத்தில் கொண்டு வெங்காயம் சார்ந்த தொழில் மையம் அமைப்பதன் மூலம் ஒட்டுமொத்த பெரம்பலூர் மாவட்டத்தின் பொருளாதாரம் மேம்படும் இதற்கு போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.