Skip to main content

ரிசார்ட்டுகளில் செயற்கை அருவிகளா? - சுற்றுலாத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Published on 23/01/2023 | Edited on 23/01/2023

 

Artificial Waterfalls in Resorts?- High Court Branch Order to Tourism Department

 

வணிக நோக்கில் அருவிகளின் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வணிக நோக்கில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட ரிசார்ட் உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம் அருவி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள அருவிகள் எல்லாம் இயற்கையாக உருவாகி பெருக்கெடுத்து வருகிறது. அவை சுற்றுலாத் தலங்களாகவும் விளங்கி வருகிறது. இந்நிலையில் பொருளாதார ரீதியாக வசதி மிக்க சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக ஏராளமான ரிசார்ட்டுகளில் செயற்கை அருவிகளை உருவாக்கி அதனை சமூக வலைத்தளங்கள் மூலம் விளம்பரப்படுத்துகிறார்கள். இதற்காக இயற்கையாக உள்ள அருவியின் நீர்வழிப் பாதைகளை மாற்றி செயற்கை அருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் இயற்கையின் சமநிலை பாதிக்கப்படுகிறது. எனவே, சட்டவிரோதமாக செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கிய தனியார் ரிசார்ட்டுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை அம்பாசமுத்திரத்தை சேர்ந்த வினோத் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

 

ஏற்கனவே இந்த வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று நடந்த விசாரணையில், சுற்றுலாத்துறை இயக்குநர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு மலையில் உருவாகி இயற்கை போக்கில் வரும் அருவியின் பாதை செயற்கையாக மாற்றப்பட்டு செயற்கை அருவிகள் உருவாக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து மூன்று மாதத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். செயற்கை அருவிகள் உருவாக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட ரிசார்ட்டுகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிக நோக்கத்திற்காக இவ்வாறு செயல்படும் ரிசார்ட்  உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். துணைபோன அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

'எனக்கு பல நிறுவனங்கள் இருப்பதால் யார் மேனேஜர் என்றே தெரியாது'-மழுப்பிய நயினார் நாகேந்திரன்

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளை பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டி ஏ-1 26, 27, 28 ஆகிய இருக்கைகளில் நயினார் நாகேந்திரன் கோட்டாவில் அவர்கள் பயணித்தது தெரியவந்தது. திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு இந்த பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், கைது செய்யப்பட்ட மூவர் மீதும் தேர்தல் பறக்கும் படை அளித்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

nn

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான இடங்களில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் நெருங்கிய ஆதரவாளர் கணேஷ்மணி என்பவர் வீட்டில் இரண்டு லட்சம் ரூபாய் பணம் சிக்கியுள்ளது. வாக்காளர்களுக்கு கொடுக்கப்படுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 வேட்டிகள், 44 நைட்டிகள் உள்ளிட்ட பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் மது பாட்டில்களும் சிக்கியதாக பறக்கும் படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நயினார் நாகேந்திரன் தங்கும் ஹோட்டல் அறையிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை புரசைவாக்கம் ப்ளூ டைமண்ட் ஹோட்டலில் அவர் தங்கும் அறையிலும் சோதனையானது நடைபெற்று வருகிறது. நாகேந்திரனுக்கு தொடர்புடைய வண்ணாரப்பேட்டையில் உள்ள லட்சுமி காயத்ரி ஹோட்டல் உரிமையாளர் குணசேகரன் வீட்டிலும் 3.72 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கணக்கில் வராத பணம் மட்டுமின்றி ஏராளமான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ச்சியாக நயினார் நாகேந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் திமுகவும் இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. இதனால் தேர்தலில் போட்டியிட நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், 'எனக்கு வேண்டியவர்கள் நிறைய பேர் இருக்காங்க. அவங்க அவரவர்கள் தொழிலுக்காக பணத்தை வைத்திருப்பார்கள். எனக்கு தொடர்புடைய இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்படவில்லை. எனக்கு பல நிறுவனங்கள் இருப்பதால் யார் மேனஜர் என்றே தெரியாது' என பதிலளித்துள்ளார்.