
கடலூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சனிக்கிழமை நடந்த விழாவுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பழனி தலைமை தாங்கினார். மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) சங்கர், உதவி திட்ட அலுவலர் சரவணகுமார், வட்டாரக் கல்வி அலுவலர்கள் இளஞ்செழியன், புவனேஸ்வரி, கலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் நசியான் கிரகோரி வரவேற்றார்.
தொடர்ந்து 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும், 9 மற்றும் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும், 11 மற்றும் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் என 3 பிரிவுகளாக கவின் கலை, நுண்கலை, இசை (வாய்ப்பாட்டு), கருவி இசை, நடனம், நாடகம், மொழித்திறன் போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
இதையடுத்து சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஐயப்பன் எம்எல்ஏ சிறந்த முறையில் கலை நிகழ்ச்சிகளை நடத்திய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். இதில் தலைமை ஆசிரியர் எல்லப்பன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜவேல் மணி, மேற்பார்வையாளர் மோகன் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் அடுத்த மாதம் (நவம்பர் ) 21-ந் தேதி முதல் 24ம் தேதி வரை நடக்கும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வர். மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்குப் பரிசுகளும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
மேலும் கலைத் திருவிழா தனி போட்டிகளில் கலந்து கொண்டு அதிகப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு கலையரசன் விருதும், மாணவிகளுக்கு கலையரசி விருதும் வழங்கப்படும். இவ்விருதுகள் 3 பிரிவுகளில் தனித்தனியே வழங்கப்பட்டு மாணவர்களின் கலைத்திறன் ஊக்கப்படுத்தப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)