
நடப்பாண்டிற்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் மார்ச் 14ஆம் தேதி நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு கடந்த மாதம் தெரிவித்தார். அதன்படி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (14-03-25) தொடங்கவுள்ளது.
இந்த கூட்டத்தொடரில், 2025-2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை தாக்கல் செய்யவுள்ளார். நாளை மறுநாள் (15-03-25) வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கையை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளார். 2025-2026 ஆண்டுக்கான முன்பணம் மானிய கோரிக்கை, கூடுதல் செலவினங்களுக்கான மானிய கோரிக்கை ஆகியவை மார்ச் மாதம் 21ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும்.
தமிழ்நாடு அரசு, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யவுள்ள நிதிநிலை அறிக்கை தொடர்பான காட்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், முரசொலி மாறன் பூங்கா, கோயம்பேடு பேருந்து நிலையம், மெரினா கடற்கரை உள்ளிட்ட 100 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 15ஆம் தேதி காலை 9:30 மணி முதல் வேளாண் அறிக்கையும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.