தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்படார். இது தொடர்பாக 11 பேர் சரணடைந்த நிலையில் 11 பேரும் கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடி காவலில் விசாரணைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இத்தகைய சூழலில் தான் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடத்தை 14.07.2024 அன்று அதிகாலை புழல் வெஜிடேரியன் நகருக்கு அழைத்துச் சென்று தடயங்கள் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து கண்டறிவதற்காக காவல்துறையினர் சென்றனர். அப்போது அவர்களின் பிடியில் இருந்து ரவுடி திருவேங்கடம் தப்பிச் சென்று, அப்பகுதியில் உள்ள இரும்பு தகடு வேயப்பட்ட சிறு கூரையின் உள்ளே பதுங்கிக் கொண்டு அங்கு மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் காவல்துறையினரை நோக்கி சுட்டுள்ளார்.
அப்போது சரணடையும்படி எச்சரிக்கை விடுத்தும் சரணடையாமல் வெளியே வர மறுத்து தப்பி செல்ல திட்டம் தீட்டியதாகத் தெரிகிறது. இதனால் வேறு வழியின்றி காவல்துறையினர் ரவுடி திருவேங்கடத்தை இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டதில் மார்பிலும், வயிற்றிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் சுருண்டு விழுந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரை மீட்டு மாதவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு திருவேங்கடத்தின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அன்றைய தினமே ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான மற்றொரு சிசிடிவி காட்சியை சென்னை காவல்துறை வெளியிட்டது. அதில் திருவேங்கடம் உள்ளிட்ட கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி படுகொலை செய்யும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இந்த வழக்கில் சரணடைந்த மொத்தம் 11 பேர் 5 நாட்கள் காவல் துறை கஸ்டடியில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் என்கவுன்டர் செய்யப்பட்ட திருவேங்கடத்தை தவிர்த்து மற்ற 10 பேரும் 5 நாள் காவல் கஸ்டடி முடிந்து பூவிருந்தவல்லி தனி கிளைச் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டுள்ளனர்.