ரஜினி எடுத்த முடிவுக்காக அவரைப் பற்றி யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம் என்று அர்ஜுனமூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த அர்ஜுன மூர்த்தி, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "ரஜினிகாந்த் மிகவும் மன உளைச்சலில் உள்ளார் என்பது எல்லோருக்கும் தெரியும். ரஜினி எடுத்த முடிவுக்காக அவரைப் பற்றி யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம்.
ரஜினியின் முடிவை உடல்நலம் கருதி எடுத்ததாக நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ரஜினியுடன் இருப்பதுதான் என்னுடைய நிலைப்பாடு. ரஜினி மக்கள் சேவை செய்யும்போது துணையாக இருப்பேன். ரஜினியுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். தமிழக மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் ரஜினி இருந்தார்; அதில் மாற்றுக் கருத்து இல்லை. எனக்கு இரண்டு கண்கள், ஒன்று மோடி; மற்றொன்று ரஜினி" என்றார்.