பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா, ரெகாப் இந்தியா பவுண்டேஷன், ரெகாப் பவுண்டேஷன், கேம்பஸ் ஃபிரண்ட் ஆப் இந்தியா, அனைத்திந்திய இமாம் கவுன்சில், தேசிய மனித உரிமைகள் கூட்டமைப்பு, தேசிய மகளிர் ஃபிரண்ட், ஜூனியர் ஃபிரண்ட் ஆகிய இயக்கங்களுக்கு 5 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் எம்பவர் இந்தியா பவுண்டேஷன் அமைப்புக்கும் 5 ஆண்டுகள் தடைவிதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசும் இதற்கான அரசாணையை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு ஆதரவாக பேசிவரும் சீமான், திருமாவளவன் ஆகியோரின் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என இந்து முன்னணி கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி கட்சி சேர்ந்த அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''தடை செய்யப்பட்ட அமைப்பு என்று தெரிந்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும், நாம் தமிழர் கட்சி சேர்ந்த சீமானும் தொடர்ந்து ஆதரித்து பேசி வருகிறார்கள். தடை செய்யப்பட்ட அமைப்புகளை ஆதரித்து பேசுவது தேச விரோத செயலாகும். எனவே விடுதலை சிறுத்தைகள் மற்றும் நாம் தமிழர் அமைப்புகளை தடை செய்ய வேண்டும்'' என்றார்.