கடந்த 7 நாட்களுக்கு முன்பு தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்குள் புகுந்த காட்டு யானையான அரிக்கொம்பன் சில நாட்களாகவே வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்தது. மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில் யானையானது கம்பம் அருகே உள்ள சண்முகா அணை பகுதியில் புகுந்தது. தொடர் முயற்சியின் பலனாக ஒரு வழியாக மயக்க ஊசி செலுத்தப்பட்டு யானை பிடிக்கப்பட்டது.
அரிக்கொம்பன் யானை தற்பொழுது ஒரு வழியாக பிடிபட்டு களக்காடு வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது மக்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது. இருப்பினும் கேரளாவில் 8 பேரை கொன்ற யானையை களக்காடு பகுதியில் விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து களக்காடு பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் அரிக்கொம்பன் யானையை மதிக்கெட்டான்சோலையில் விட வனத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். கேரளாவை சேர்ந்த ரபேக்கா ஜோசப் என்பவர் தேனி மாவட்டம் மதிக்கெட்டான்சோலை பகுதியில் அரிக்கொம்பன் யானையை விட வேண்டும். அது கேரளாவை சேர்ந்த பகுதி என்பதாலும், அரிக்கொம்பனுக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட பகுதியாக இருப்பதாலும் அங்கே விடுவது தான் சரியானதாக இருக்கும் என தெரிவித்துள்ளார். இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள இருப்பதாக மதுரை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.