ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள சோகனூர் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுனன் (வயது 20), செப்பேடு பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 25). நண்பர்களான அர்ஜூன், சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் சிலர், நேற்று முன்தினம் (07/04/2021) இரவு பக்கத்துக் கிராமமான சித்தம்பாடி பகுதியில் மது அருந்தியுள்ளனர். அப்போது, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், மற்றொரு தரப்பினருடன் ஏற்பட்ட பிரச்சினையைக் குறித்து பேச்சுவார்த்தை நடத்த பெருமாள்ராஜ பேட்டையைச் சேர்ந்த ஒருவரிடம் மது அருந்த வரும்படியும், பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தும்படியும் அழைத்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து அந்த நபர் அங்கு சென்றார். அப்போது அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் அந்த இரு தரப்பினருக்கும் மீண்டும் பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில், இருதரப்பு கோஷ்டிகளும் பாட்டில் மற்றும் கத்தி, கட்டைகளால் பயங்கரமாக தாக்கிக்கொண்டனர். இதில் சோகனூரைச் சேர்ந்த அர்ஜூனன், செப்பேடு பகுதியைச் சேர்ந்த சூர்யா, மதன், சவுந்தர்ராஜன் ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அர்ஜூனன், சூர்யா இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். காயம் அடைந்த 2 பேரும் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், கொலை வழக்கில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய நான்கு தனிப்படைகளும் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பெருமாள் ராஜபேட்டையைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே, சோகனூர் பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மக்கள் கடந்த நான்கு நாள்களாக உடல்களை வாங்க மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தங்கள் பகுதி வாயிலாக நடக்கும் மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். மேலும் உயிரிழந்தவர்களின் மனைவிகளுக்கு உரிய அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில் உயிரிழந்த சூர்யா, அர்ஜூன் ஆகியோரின் குடும்பத்தாருக்கு தலா ரூபாய் 4 லட்சத்து 12,500 முதல் கட்ட நிவாரணமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு வேலை வழங்கும் வரை மாதம் ரூபாய் 5,000 உதவித்தொகை வழங்கவும் நிவாரண ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உடல்களை (நான்கு நாட்களுக்குப் பின்) குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர்.