இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதில், 6 கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இதற்கிடையே, இறுதிக்கட்டத் தேர்தலான ஜூன் 1ஆம் தேதி அன்று நடைபெறும் ஏழாம் கட்ட வாக்குப்பதிவை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஜூன் நான்காம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் ஜூன் ஒன்றாம் தேதி 'இந்தியா கூட்டணி' கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுகவின் சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் மூத்த நிர்வாகிகளுடன் தமிழக முதல்வரும், திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது கட்சியினர் மற்றும் முகவர்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்தியா கூட்டணிக் கட்சியின் ஆலோசனை பங்கேற்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் ஜூன் ஒன்றாம் தேதி திமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் நடைபெற இருப்பதாகவும் இந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். ஜூன் ஒன்றாம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறும். தலைமை முகவர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.