இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தேசியத் தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இளங்கலை மற்றும் முதுகலைக்கென தனித்தனியாக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி https://ncct.nta.nic.in என்ற இணையதளத்தில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வானது மே 7 ஆம் தேதி நடைபெற உள்ளது.
தமிழகத்தில் நீட் விலக்கு கொண்டு வர வேண்டும் என தமிழக அரசு சார்பாக பல்வேறு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக அண்மையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய மனுத்தாக்கல் ஒன்றைச் செய்துள்ளது. அதில், நீட் தேர்வு நடத்துவது கூட்டாட்சிக்கு எதிரானது. கூட்டாட்சி கொள்கையையே இது மீறுவதாக உள்ளது. நீட் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு மாநில அரசைக் கட்டுப்படுத்தாது என அறிவிக்க வேண்டும் என அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.