
நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி வசூலிக்கத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு தனி நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தனி நீதிபதி, நடிகர் விஜய் தரப்புக்கு கண்டம் தெரிவித்து, ரூபாய் 1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் மேல் முறையீடு செய்திருந்தார். ஆனால் தனி நீதிபதி அளித்த தீர்ப்பின் நகல் இல்லாததால், விஜய்யின் வழக்கு பட்டியலிடப்படவில்லை.
இந்நிலையில், தீர்ப்பு நகல் இல்லாமல் வழக்கைப் பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிடக் கோரி நடிகர் விஜய் சார்பில் கூடுதல் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. தற்போது இந்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, நடிகர் விஜய்யின் கோரிக்கையை ஏற்று, தீர்ப்பு நகலின்றி அவரது மனுவைப் பட்டியலிட உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில், வழக்கு விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்க விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.