Skip to main content

தென்பெண்ணை கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள் - ஐயப்பன் எம்.எல்.ஏ. அறிவுறுத்தல்

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

NN

 

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கடலூரில் 12 மணி நேரத்தில் 12 சென்டி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் 70 சென்டி மீட்டர் மழைப் பதிவாகி உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கடலூர் நகரை ஒட்டி ஓடும் தென்பண்ணையாற்றின் இரு கரைகளையும் தொட்டவாறு மழைநீர் செல்கிறது.

 

தென்பெண்ணை ஆற்றின் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கும்தா மேடு என்ற புதுவை மாநில பகுதிக்குச் செல்ல தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதில் பொதுமக்கள் சென்றால் ஆபத்து ஏற்படும் எனப் பாலத்தை மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

 

இதனைத் தொடர்ந்து தொடர் கனமழை காரணமாக ஆற்றில் அதிகமாகத் தண்ணீர் செல்வதை கடலூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஐயப்பன் செவ்வாய்க்கிழமை அதிகாரிகளுடன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆற்றின் கரையோரம் குடியிருக்கும் பொதுமக்களிடம், ஆற்றில் அதிகம் தண்ணீர் வந்தால் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வேண்டும் என்றும் அருகே உள்ள பாதுகாப்பான அரசு இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தினார். மேலும் அவர்களுக்கு எந்த நேரத்தில் உதவி தேவைப்பட்டாலும் உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டும் எனவும் கூறினார். இவருடன் அரசு அலுவலர்கள் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கடலூர் கொலை சம்பவம்; விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்!

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
Cuddalore incident information revealed in the investigation

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் -  கமலேஸ்வரி தம்பதியினர் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள காராமணிக்குப்பம் ஜோதி  நகரில் வாடகை வீட்டில் பல ஆண்டுகளாக வசித்து வந்துள்ளனர். இதில் சுரேஷ்குமார் நெல்லிக்குப்பத்தில் உள்ள இஐடி சர்க்கரை ஆலையில் மருந்தாளுநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் 70 வயதான நிலையில் வயது மூப்பின் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன் உயிரிழந்தார்.

இதனையடுத்து கமலேஸ்வரி அவரது மகன் சுகந்தகுமார், பேரன் இஷான் ஆகியோர் வசித்து வருகின்றனர். இதற்கிடையே சுகந்தகுமார் திருமணம் ஆகி சில வருடங்களிலேயே அவர் மனைவி பிரிந்து சென்று விவாகரத்து பெற்று சென்றுவிட்டார். அதே சமயம் சுகந்தகுமார் ஹைதராபாத்தில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணி செய்து வரும் நிலையில் 15 நாட்கள் அலுவலகத்திலும் 15 நாட்கள் வீட்டில் இருந்தும் பணி செய்து வந்துள்ளார். இவர் கடந்த வாரம் ஹைதராபாத்தில் இருந்து வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. 

Cuddalore incident information revealed in the investigation

இத்தகைய சூழலில் தான் ஜூலை 15 ஆம் தேதி திங்கட்கிழமை வீட்டின் ஜன்னல் பகுதியில் இருந்து லேசாக புகை வந்ததால் அக்கம்பக்கத்தினர் காவல் துறைக்கு தகவலளித்தனர். இதையடுத்து சம்பவம் குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கும் பொழுது 3 பேரும் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் எரிந்த நிலையில் கிடந்த உடல்களைக் கண்டு அதிர்ந்து போன போலீசார் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சம்பவ இடத்திற்கு அருகில் வசித்து வரும் சண்முகவேல் என்பவர்தான் இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் திடீர் திருப்பமாக அதே பகுதியில்  வசித்து வரும்  சங்கர் ஆனந்த், சாகுல் ஹமீது ஆகிய இருவரும் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

Cuddalore incident information revealed in the investigation

போலீசார் நடத்திய விசாரணையில் சங்கர் ஆனந்த் மற்றும் சாகுல் ஹமீது ஆகிய இருவரும் கடந்த 12ஆம் தேதி இரவு திட்டமிட்டு  சுகந்தகுமார் வீட்டில் மறைந்திருந்து அவர்கள் வீட்டுக் கதவு திறந்து இருந்தபோது வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அதன் பின்பு இரவு கதவைத் தட்டி சுகந்த குமார் வெளியே வரும்போது  அவரை கத்தியால் வெட்டி தாக்கியுள்ளனர் மேலும் சுகந்த குமார் வீட்டிற்குள் மீண்டும் நுழைந்து உள்ளே நுழைந்த போது மேலும் தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து அவரது தாய் 10 வயது குழந்தை என மூன்று பேரையும் வெட்டி கொலை செய்துள்ளனர். அதோடு நகைகளையும், பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர். அதே பகுதியில் மறைந்திருந்து மீண்டும் 14ஆம் தேதி இரவு வந்து கொலை செய்யப்பட்ட மூன்று பேரையும் பெட்ரோல் ஊற்றி உடலை எரித்துவிட்டுச் சென்றதாக காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Next Story

8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
Chance of rain in 8 districts

தமிழகத்தில் கடந்த மே,  ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் தான் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத்  தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்படி தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய  8 மாவட்டங்களில் அடுத்து 3 மணி நேரத்தில் அதாவது இன்று (19.07.2024) காலை 10 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கனமழை எதிரொலியாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய 4 வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (19.07.2024) ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.