Skip to main content

அரசு ஊழியர்கள் கவனத்திற்கு... லஞ்ச ஒழிப்புத்துறை எச்சரிக்கை!

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
Anti-corruption department warns government employees to be wary of fake reporters

திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களில் சிலர் பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய சட்டப்படியான பணியை செய்யாமல் கையூட்டு பெறுபவர்களை அடையாளம் கண்டு, சம்மந்தப்பட்ட ஊழியர்களின் மீது சட்ட நடவடிக்கைகளானது திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறையினரால் எடுக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த சில நாட்களாக, தினசரி பத்திரிக்கைகள், வார பத்திரிக்கைகள் மற்றும் மாதப்பத்திரிக்கைகளில் பணிபுரியும் நிருபர்கள் என்று சொல்லிக்கொண்டு போலியான சில நிருபர்கள் திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு சென்று, குறிப்பாக சார்பதிவாளர் அலுவலகங்கள், வட்டாரப் போக்குவரத்துத்துறை அலுவலகங்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலகங்கள் ஆகிய அலுவலகங்களுக்குச் சென்று அங்குள்ள அரசு அலுவலர்களிடம், உங்களைப்பற்றி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு பொய்யான தகவலை அளிப்பேன் என மிரட்டி பணம் பறித்து வருகிறார்கள் என்ற தகவல் எங்களது துறையின் கவனத்திற்கு தெரிய வருகிறது. அதேபோல் மேலும் சில மோசடி நபர்கள், திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்களின் கைபேசிகளுக்கு பொது தொலைபேசிகளில் இருந்து அழைத்து, தங்களை விஜிலன்ஸ் அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு மிரட்டி பணம் பறித்து வருகிறார்கள் என்ற தகவலும் எங்களது துறையின் கவனத்திற்கு தெரிய வருகிறது.

எனவே, திருச்சி மாவட்டத்தில் பணிபுரியக்கூடிய அரசு ஊழியர்கள் எவருக்கேனும் மேற்படியான நிகழ்வுகள் ஏதேனும் ஏற்படும் சூழ்நிலையில் சம்மந்தப்பட்ட அரசு ஊழியர்கள், போலி நிருபர்கள் பற்றிய தகவலை, உடனடியாக சம்மந்தப்பட்ட  உள்ளூர் காவல்துறையினருக்கு புகார் அளிக்குமாறும், விஜிலன்ஸ் அதிகாரிகள் என்று கூறிக்கொள்ளும் போலியான நபர்கள் பற்றிய விவரங்களை திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தெரிவிக்க வேண்டுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இச்செய்தியினை திருச்சி மாவட்டத்தில் அரசுத்துறைகளில் பணிபுரியும் உயர் அலுவலர்கள், தங்கள் கீழ் பணிபுரியும் அலுவலர்களுக்கும் தெரியப்படுத்தி எச்சரிக்கையாக இருக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறையின் அலுவலக தொலைபேசி எண்.0431-2420166, டி.எஸ்.பி கைபேசி எண்.94981-57799 காவல் ஆய்வாளர்களின் கைபேசி எண்கள்- 94432-10531, 94981-05856, 94981-56644, 89036-35766 எண்களை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.

Next Story

பேரூராட்சி அலுவலகத்தில் சிக்கிய பணம்; 3 பேர் மீது பாய்ந்த வழக்கு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-bribery department seizes Rs 1 lakh  in Chethiyathoppu municipal office

சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பு பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக பேரூராட்சி கணக்குகளை தணிக்கை செய்யும் பணியில் தணிக்கைக் குழு உதவி இயக்குநர் பூங்குழலி தலைமையில் தணிக்கை குழு ஆய்வாளர் உள்ளிட்ட அலுவலர்கள் தணிக்கை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் பேரூராட்சி ஊழல் முறைகேடு கணக்குகள் குறித்து எந்த ஒரு மேல் நடவடிக்கையும் எடுக்காத வகையில் கணக்குகளை சரி செய்வதற்காக பெரிய அளவில் லஞ்சம் வழங்க உள்ளதாக கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தேவநாதனுக்கு புதன்கிழமை தகவல் வந்துள்ளது.

அதன் பெயரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் புதன்கிழமை மாலை திடீரென பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பணம் இருந்துள்ளது.  இதனைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் சம்பந்தப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன், கணக்கு தணிக்கை குழுவின் உதவி இயக்குநர் பூங்குழலி, தணிக்கை குழுவின் ஆய்வாளர் விஜயலட்சுமி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வியாழக்கிழமை  வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.