Anniyur Siva receiving the certificate of success

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்தத் தொகுதிக்குக் கடந்த 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட்டனர். அதோடு 11 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேட்சைகள் என மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்திலிருந்தனர். அதிமுக, தேமுதிக ஆகிய இருகட்சிகளும் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணித்திருந்தது.

Advertisment

இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (13.07.2024) எண்ணப்பட்டன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. இந்நிலையில் 20 சுற்றுகள் முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1 லட்சத்து 24 ஆயிரத்து 53 வாக்குகள் பெற்று 67 ஆயிரத்து 757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisment

Anniyur Siva receiving the certificate of success

இதனையடுத்து விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்து பெற்றுக்கொண்டார். அப்போது அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், விழுப்புரம் மாவட்ட திமுக பொறுப்பாளர் கௌதம் சிகாமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

அதே சமயம் பாமக வேட்பாளர் சி.அன்புமணி 56 ஆயிரத்து 26 வாக்குகளும், நாதக வேட்பாளர் அபிநயா 10 ஆயிரத்து 479 வாக்குகளும் பெற்றனர். இந்தத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்ட அபிநயா டெப்பாசிட்டை இழந்துள்ளார். திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி சான்றிதழைப் பெற்ற பின் அமைச்சர் பொன்முடி செய்தியாளரைசந்தித்து பேசுகையில், “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் காரணம். கடந்த 3 ஆண்டுகளில் திமுக அரசு நிறைவேற்றிய திட்டங்களால் வெற்றி பெற்றிருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

Advertisment