Skip to main content

அண்ணாமலைப் பல்கலை., -யை இணைவு பல்கலை., -யாக மாற்றும் முடிவு... ஊழியர் சங்கத்தினர் முதல்வருக்கு நன்றி!

Published on 21/07/2021 | Edited on 21/07/2021

 

 

anna university tn govt decision university employees association

 

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை இணைவு பல்கலைக்கழகமாக மாற்றும் முடிவை வரவேற்று முன்னாள் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

 

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை இணைவுப் பல்கலைக்கழகமாக மாற்றும் தமிழக அரசின் கொள்கை முடிவுக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ரவி தலைமையில் முன்னாள் பொறுப்பாளர்கள் ஷியாம் சுந்தர், ஜான், ஞானசேகரன், மணிகண்டன், சரவணன், மகேஷ், கோவிந்தராஜன், கனகசித்தன், மலர் மன்னன், அருள்மொழி, கந்தசாமி, இரவிச்சந்திரன், தேவேந்திரன், தமிழ்ச்செல்வன் மற்றும் பலர் கூட்டாக இணைந்து தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை  அமைச்சர், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர்  உள்ளிட்டவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பல்கலைக்கழக வளாகத்தில் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியைக் கொண்டாடினார்கள்.

 

இதுகுறித்து ஊழியர் சங்க முன்னாள் பொதுச்செயலாளர் இரவி செய்திளார்களிடம் பேசுகையில், "உலகப் புகழ்பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஒருமைத்தன்மைக் கொண்ட பல்கலைக்கழகம் என்ற நிலையில் இருந்து இணைவுப் பல்கலைக்கழகமாக மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு (JAC), 2012- 2015 காலகட்ட வாழ்வாதார போராட்டத்தின் மூலம், தமிழக அரசால் நியமிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் நிர்வாகி  ஷிவ்தாஸ் மீனா, IAS அவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

 

இந்த நிலையில் JAC கூட்டமைப்பின் கோரிக்கையை ஆராய்ந்து அதனை ஏற்றுக்கொண்ட ஷிவ்தாஸ் மீனா IAS அண்ணாமலைப்  பல்கலைக்கழக நிதிச்சிக்கலை தீர்ப்பதற்கு அரசுக்கு அளித்த 5 பரிந்துரைகளில் ஒன்றாக, அருகாமையில் அமைந்துள்ள 4 மாவட்டக் கல்லூரிகளை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளாக இணைத்து இப்பல்கலைக்கழகத்தை ஒரு இணைவுப் பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும் எனக்  கடந்த 2015- ஆம் ஆண்டு பரிந்துரை செய்திருந்தார்.

 

சுமார் 6 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்த இப்பரிந்துரையை, இன்றைய தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளை அண்ணாமலைப் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளாக இணைக்க கொள்கை முடிவு எடுத்து, அதற்கான பணிகள் நடந்து வருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர்  பொன்முடி அறிவிப்பு வெளியிட்டதை மனப்பூர்வமாக வரவேற்கிறோம்.

 

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கொள்கை முடிவால் நான்கு மாவட்டங்களில் உள்ள 100- க்கும் மேற்பட்ட கல்லூரிகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உறுப்புக் கல்லூரிகளாக இணைவதால் அனைத்துக் கல்லூரிகளின் தேர்வுகளையும் அண்ணாமலைப் பல்கலைக்கழகமே நடத்தும். மேலும், இக்கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் Ph.D. ஆய்வுப் படிப்புகளை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சேர வழிவகுப்பதோடு, கல்வித்தரமும் உயர்ந்து மாணவர்கள் பயன்படுவார்கள்.  இதன்மூலம் பல்கலைக்கழகத்தின் வருவாய் அதிகரித்து பல்கலைக்கழகத்தின் நிதிச் சிக்கல் தீர்வதற்கு வழி பிறக்கும்.

 

மேலும், இங்கிருந்து பணி நிரவலில் சென்று தமிழ்நாடு முழுவதும் பணியாற்றி வரும் மாற்றுத் திறனாளி ஊழியர்களை  பல்கலைக்கழகத்திலோ அல்லது கடலூர் மாவட்டத்திலோ பணியமர்த்த வேண்டும் எனவும், பல்கலைக்கழகத்தில் சுமார் 12 ஆண்டுகளாக மிகக்குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வரும் Consolidated Pay மற்றும் NMR ஊழியர்களுக்கு பணிவரன்முறை செய்யப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கிட ஆவன செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சரிடம் வேண்டுகோள் வைக்கின்றோம்" என்றார்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பாலியல் சமத்துவ பயிற்சி பட்டறை

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Gender Equality Workshop at Annamalai University

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து பாலியல் சமத்துவத்தைப் பற்றிய 3 நாட்கள் பயிற்சி பட்டறை பல்கலைக்கழக மக்களியல் துறையில் நடைபெற்றது. மக்களியல் துறை உதவிப் பேராசிரியர் க. மகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். கலைப்புல தலைவர் விஜயராணி தலைமை தாங்கிப் பேசினார். துறைத் தலைவர் ரவிசங்கர் பயிற்சி பட்டறை பற்றிய தொகுப்பு உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆளவை மன்ற உறுப்பினர் பேராசிரியர் அரங்க பாரி, ராஜீவ்காந்தி தேசிய மேம்பாட்டு நிறுவனத்தின் பேராசிரியர் வசந்தி ராஜேந்திரன், சிதம்பரம் வட்டாட்சியர் ஹேமா ஆனந்தி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ - மாணவிகளுக்குப் பாலியல் சமத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ - மாணவியர்கள் மற்றும் அதன் உறுப்பு கல்லூரி மாணவ - மாணவியர்கள் 100 பேர் கலந்து கொண்டனர். மக்களியல் துறை இணைப் பேராசிரியர் பீமலதா தேவி நன்றியுரை வழங்கினார்.

Next Story

‘மீண்டும் கல்லூரிக்குப் போகலாம்’ - குடும்பத்தினருடன் பொன்விழாவைக் கொண்டாடிய முன்னாள் மாணவர்கள்!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Ex-students who celebrated Golden Jubilee with their families at annamalai university

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 1970 முதல் 1974 ஆம் ஆண்டில் வேளாண் கல்லூரியில் 45 மாணவர்கள் பயின்றனர். கல்வி பயின்ற பிறகு அவர்கள் மத்திய - மாநில அரசின் பல்வேறு துறைகளில் வங்கி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட  பல்வேறு துறைகளில் பணியாற்றி பணி நிறைவு பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, ‘AU74 அக்ரி பட்டதாரிகள் சங்கம்’ என்ற சங்கத்தை அமைத்து,  அரசுப் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர். மேலும் அவர்கள், பல்வேறு கல்லூரிகளில் பயிலும் வேளாண் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகின்றனர்.

இவர்கள் கல்வி பயின்று 50 ஆண்டுகள் கடந்த நிலையில், குடும்பத்தினருடன் இணைந்து 50 ஆம் ஆண்டு பொன்விழாவை (1974 - 2024) பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் கொண்டாடினார்கள். இவ்விழாவுக்கு சங்கத்தின் தலைவர் அக்ரி நடராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராகப் பல்கலைக்கழக துணைவேந்தர் இராம. கதிரேசன் கலந்துகொண்டு, முன்னாள் மாணவர்களை பாராட்டி பொன்விழா ஆண்டு மலரை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.

இதில் பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரவேலு,  தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், வேளாண் புல தலைவர் அங்கயற்கண்ணி மற்றும் 1974 ஆம் ஆண்டுகளில் மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவித்த முன்னாள் பேராசிரியர்கள் பாலசுப்ரமணியன், கோவிந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டு முன்னாள் மாணவர்களைப் பாராட்டி மலரும் நினைவுகளை நினைவுகூர்ந்து வாழ்த்தினார்கள்.

Ex-students who celebrated Golden Jubilee with their families at annamalai university

மேலும், அங்கு பயின்ற முன்னாள் வேளாண் மாணவர்கள் வேளாண் கல்லூரிக்கு, சங்கத்தின் சார்பாக ரூ. 3 லட்சம் செலவில் உபகரணங்கள், அறைகள் புதுப்பித்தல் போன்ற உதவிகளைச் செய்வதாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து குடும்பத்துடன் அனைவரும் ஆட்டம் பாட்டத்துடன் மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது, ‘50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை குடும்பத்துடன் சந்தித்த நிகழ்வு மறக்க முடியாத ஒன்றாக உள்ளது’ என்று கூறினார்கள்.