அண்ணாமலைப் பல்கலைக்கழக பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் இயக்குநரகம் மற்றும் சென்னை இம்பேக்ட் ஐஏஎஸ் அகடமி இணைந்து யுபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் இராம. கதிரேசன் கலந்துகொண்டு தலைமை தாங்கி பேசினார். அப்போது நேர மேலாண்மை குறித்தும், யுபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மற்றும் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை இம்பேக்ட் ஐஏஎஸ் அகடமி இயக்குநர் வெங்கடேஷ் குமார், கலந்துகொண்டு மாணவ, மாணவிகளின் எதிர்காலத்திற்கு இந்த தேர்வுகளின் முக்கியத்துவம் மற்றும் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்தார். மேலும், மாணவர்களுக்கான கேள்வி - பதில் பகுதி இடம் பெற்றிருந்தது. இதில் பல துறைகளைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள் உற்சாகமாக கலந்துகொண்டு தங்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றனர். பயிற்சி, வேலை வாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் இயக்குநரகத்தின் இயக்குநர் கிருஷ்ணசாமி வரவேற்றார். இணை இயக்குநர் பத்மநாபன் நன்றி கூறினார்.
இவ்விழாவில் புல முதல்வர்கள், துறைத் தலைவர்கள், பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அதிகாரிகள், துறை ஒருங்கிணைப்பாளர்கள், துணைவேந்தரின் நேர்முகச் செயலர் பாக்கியராஜ், மக்கள் தொடர்பு அதிகாரி ரெத்தின சம்பத் ஆகியோர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் 350க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.