அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி மையத்தில் 2024-25-ஆம் ஆண்டிற்கான தொலைதூரக் கல்வி பயில புதிய மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகத்தை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ராம. கதிரேசன் கலந்துகொண்டு விண்ணப்பத்தை மாணவர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 2022-ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானிய குழு அளித்த ஒப்புதலின்படி 125 பட்டப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தொலைதூரக் கல்வியில் 25,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை 80 ஆயிரம் ஆக உயர்த்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 16 வகையான பட்டப்படிப்புகளை தமிழ் வழியில் தமிழகம் மற்றும் ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி, இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இன்னும் கூடுதலாக 35 வகையான பட்டப் படிப்புகளுக்கு அனுமதி பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தொலைதூரக் கல்வியை ஆன்லைன் வழியாக 2024 - 25 ஆம் ஆண்டிலிருந்து துவக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்த பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்புகளை நடத்துவதற்கும், சட்டப் படிப்புகளை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் பயில்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தொலைதூரக் கல்வியில் சேர உள்ள மாணவர்கள், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக சர்வீஸ் சென்டரில் நேரிலும், அதேபோல் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பத்தினை பெற்றுக்கொள்ளலாம். வெளி மாநில மாணவர்கள் ஆன்லைன் மூலமாக மட்டும் விண்ணப்பத்தை பெற முடியும் என தெரிவித்தார். இவருடன் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பிரகாஷ் மற்றும் தொலைதூரக் கல்வி இயக்குநர் சீனிவாசன் உள்ளிட்ட அனைத்து துறை முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் உடன் இருந்தனர்.