Skip to main content

அவதூறு பரப்பும் மலிவான அரசியல் செய்யும் அண்ணாமலை!- துரை வைகோ சுளீர்!

Published on 13/05/2022 | Edited on 13/05/2022

 

Annamalai is a cheap political place that spreads slander! - Durai Vaiko Sulir!

 

கடந்த மே 6- ஆம் தேதி, விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம்- ஓ.மேட்டுப்பட்டி அருகே, எஸ்.ஆர். நாயுடு கல்லூரி வாகனம் விபத்துக்குள்ளாகி, பயணம் செய்த 60 மாணவியர்களில் 26 பேர் காயமடைந்தனர். அவர்களில் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி கௌரியைச் சந்தித்து ஆறுதல் கூறினார், மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ. அங்கு செய்தியாளர்களின் கேள்விகளை எதிர்கொண்டு பேட்டியளித்தார்.  

 

பிரதமரின் திட்டங்களில் முறைகேடு நடக்கிறது. அதனால், ஒவ்வொரு தாலுகாவிலும் பா.ஜ.க. சார்பில் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படும் என பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறாரே?

குறைகளை அரசு நிவர்த்தி செய்து வருகிறது.  தவறுகள் ஏதேனும் இருந்தால்,  அதிமுகவினரோ, பாஜகவினரோ சுட்டிக் காட்டலாம்.  அதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு.  அதை விட்டுவிட்டு,  மாநில சுயாட்சியைத் தவிடுபொடியாக்கும் வகையில்,   ஒன்றிய அரசு மூலம்,  இவர்களாகவே ஒரு போலியான அரசாங்கம் நடத்த முயற்சிக்கிறார்கள். அது நடக்கக்கூடாது.

Annamalai is a cheap political place that spreads slander! - Durai Vaiko Sulir!


தமிழக மீனவர் விவகாரத்தில் அண்ணாமலை இலங்கை சென்றபிறகே, பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளன. திராவிட கட்சிகள் வெறும் அரசியல் மட்டுமே செய்கின்றன என அர்ஜுன் சம்பத் பேசியிருக்கிறாரே? 

சகோதரர் அர்ஜுன் சம்பத்தாக இருக்கட்டும்..  சகோதரர் அண்ணாமலையாக இருக்கட்டும். அவர்களது  அறிக்கைகளைப் பார்க்கும்போது மலிவான அரசியலே செய்கின்றனர். இலங்கையில் நிலவும்  தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்தி,  இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து,  தமிழக மீனவர்கள் பிரச்சனையைச் சரி செய்யவும்,  கச்சத்தீவை மீட்கவும், ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். மீட்க இயலாவிட்டாலும், கச்சதீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீன் பிடிக்கும் உரிமையையாவது வாங்கித் தரவேண்டும். இதில் அரசியல் எதுவும் கிடையாது. சகோதரர் அண்ணாமலைக்கு நான் கூறிக்கொள்வதெல்லாம், குற்றச்சாட்டுகளையும் குறைகளையும்  கூறலாம். அவதூறு பரப்பும் மலிவான அரசியல் பண்ணக்கூடாது. 

இவ்வாறு பதிலளித்தார் துரை வைகோ.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

நான் என்ன பாகிஸ்தான் குடிமகனா? - துரை வைகோ ஆவேசம்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 Am I a citizen of Pakistan? - Durai vaiko 

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. திருச்சி தொகுதியில் போட்டியிட இருக்கிறது. சொந்த சின்னத்தில் மட்டுமே மதிமுக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பம்பரம் சின்னத்தை  தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவசர முறையீடு செய்யப்பட்ட நிலையில், நேற்று இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

வைகோ தரப்பில், 'தங்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கட்சி நிர்வாகிகளின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யவில்லை. நாளை கடைசி நாள் என்பதால் தாங்கள் கோரிக்கையை உடனடியாக பரிசீலிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட விட வேண்டும்' என வாதிடப்பட்டது. இதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர், 'சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும். மதிமுக கோரிக்கை மீது இன்று முடிவு எடுக்கப்படும். இது குறித்து சம்பந்தப்பட்ட பகுதியின் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார்' என்று தெரிவிக்கப்பட்டது. பம்பரம் சின்னம் தற்போது பொது சின்ன பட்டியலில் உள்ளதா இல்லையா என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை  ஒத்திவைத்தனர். மேலும், மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கோரிய மனு மீது புதன் கிழமை காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில்.. “இரண்டு தொகுதியில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் ஒதுக்க முடியும். ஒரு தொகுதியில் போட்டியிட்டால் ஒதுக்க முடியாது” என்று தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து மதிமுகவுக்கு தகவல் அனுப்பியுள்ளது. இது மதிமுக தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், 14 ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில் மதிமுகவுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பம்பரம் சின்னம் பொது சின்னமாகவோ, ஒதுக்கீட்டு சின்னமாகவோ வகைப்படுத்தப்படவில்லை எனச் சொல்லப்பட்டது. முன்னதாக, இன்று காலை திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ, “பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் தான் கூறி உள்ளது. நீதிமன்றம் கூறவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வரும்போது எங்கள் வழக்கறிஞர்கள் வாதத்தை முன்வைத்து பம்பரம் சின்னத்தை கேட்பார்கள். சின்னம் விவகாரத்தில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். வேட்பாளர் நல்ல வேட்பாளர் என்றால் அவரின் சின்னம் என்ன என்பதை தேடும் மக்கள் அதிகம் இருக்கிறார்கள். இன்றைய காலத்தில் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க 24 மணி நேரம் கூட தேவைப்படாது. 

பா.ஜ.கவை உண்மையாக எதிர்க்கும் அணியாக தி.மு.க அணி இருக்கிறது. திருச்சியில் அந்த அணி சார்பில் ம.தி.மு.க போட்டியிடுகிறது. இது மக்களுக்கு நன்றாகவே தெரியும். வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்டவை பா.ஜ.கவிற்கு ஆதரவாக இருக்கிறது. தேர்தல் ஆணையம் கேட்ட ஆவணங்கள் கொடுத்துவிட்டோம். ஆனால் பம்பரம் சின்னம் ஒதுக்கவில்லை. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணத்தை கூறுகிறார்கள். ம.தி.மு.க, விசிக மட்டுமல்ல நாம் தமிழர் கட்சிக்கும் சின்னம் ஒதுக்கவில்லை. பா.ஜ.க.வை எதிர்க்கும் அரசியல் இயக்கங்கள் இருக்கக்கூடாது என்பதற்காக பா.ஜ.கவிற்கு ஆதரவாகத் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. 

அதிமுகவினர் பதட்டத்தில் இருக்கிறார்கள். அவர்கள் சின்னமே முடங்க வாய்ப்பிருக்கிறது. கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எனக்கு வாழ்த்து கூறுவதை போல் பேசியுள்ளார். எதிர்க்கட்சிகளை முடக்க நினைக்கும் பா.ஜ.கவிற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். ஒன்றிய பா.ஜ.க அரசு வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்டவற்றை கொண்டு ஏதாவது ஒரு விதத்தில் இடைஞ்சல் கொடுத்து வருகிறார்கள். என்னை வெளியூர் வேட்பாளர் என்கிறார்கள். நான் பாகிஸ்தானிலிருந்து வரவில்லை. தமிழ்நாட்டை சேர்ந்தவன் தான். திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வந்துள்ளேன்” என்றார்.  

1994ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மதிமுக, 1996 ஆம் ஆண்டு முதல் சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது. கடந்த 2006ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 6% வாக்குகள் மட்டுமே பெற்றதால் அந்த கட்சி அங்கீகாரம் இழந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

சின்னம் தொடர்பான விவகாரம்; ம.தி.மு.க. முக்கிய கோரிக்கை!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Matters relating to symbols; MDMK Important request

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ திருச்சியில் போட்டியிடுகிறார். சொந்த சின்னத்தில் மட்டுமே ம.தி.மு.க. போட்டியிடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பம்பரம் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று (27.03.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் வாதிடுகையில், “பொதுச்சின்னங்கள் பட்டியலில் இல்லாத பம்பரம் சின்னத்தை மதிமுகவுக்கு வழங்க சட்டவிதிகள் இல்லை. ஒரே மாநிலத்திற்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் ஒதுக்க முடியும்” எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் வைகோ தரப்பில் வாதிடுகையில், “வேறு மாநிலத்தில் மேலும் ஒரு தொகுதியில் போட்டியிட உள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “வேட்புமனு தாக்கலின் கடைசி நாளில் இந்த வழக்கிற்கு தீர்வு காண இயலாது. கடந்த 2010ஆம் ஆண்டு ம.தி.மு.க. அங்கீகாரத்தை இழந்துவிட்டது. தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தின் படி ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னத்தை வழங்க முடியாது. எனவே ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது’ எனத் தெரிவித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. 

இந்நிலையில் தீப்பெட்டி அல்லது கேஸ் சிலிண்டர் சின்னம் ஒதுக்க திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலரிடம் ம.தி.மு.க. சார்பில் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சின்னத்தை சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்காமல் மாநில கட்சியாக உள்ள ம.தி.மு.க.விற்கு ஒதுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ம.தி.மு.க. மாநிலக் கட்சியாக இருப்பதால் கேட்கும் சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளதாக ம.தி.மு.க. தரப்பில் கூறப்படுகிறது. மார்ச் 30 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட உள்ளது. அப்போது ம.தி.மு.க.விற்கு ஒதுக்கப்படும் சின்னம் குறித்த விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.