அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர் ஆர்.வேல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இப்பதவியில் நீடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த சூரப்பாவின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைந்தது. இதனையடுத்து, புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்யும் பணியில் தேர்வுக்குழு ஈடுபட்டு வந்தது. அப்பணி நிறைவடைந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக டாக்டர் ஆர்.வேல்ராஜை நியமித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் குறித்துப் பார்ப்போம்!
அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் ஆர்.வேல்ராஜ், அண்ணா பல்கலைக்கழக ஆற்றல் துறையின் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். ஆற்றல் துறையின் தலைவர், இயக்குநர் என 14 ஆண்டுகள் நிர்வாக அனுபவமும் இவருக்கு இருக்கிறது. கல்வித்துறையில் ஒட்டுமொத்தமாக 33 ஆண்டுகள் அனுபவம் உள்ள டாக்டர் ஆர்.வேல்ராஜ், இதுவரை 193 ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். மேலும், அமெரிக்கா, பிரிட்டன்,ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யா, தென் கொரியா, ஆஸ்திரேலியா ஆகிய ஏழு நாடுகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.