அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரது மகள் பிளஸ் 2 மாணவி அனிதா. இவர் ப்ளஸ் டூ தேர்வில் அதிக அளவில் மதிப்பெண் எடுத்து இருந்தார், பின்னர், மருத்துவம் படிப்பதற்காக அனிதா நீட் தேர்வு எழுதினார். தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. இதனால், மனம் உடைந்த அனிதா, 2017 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணம் தமிழகம் முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் பொதுநல இயக்கங்கள் தொடர் போராட்டங்கள் நடத்தின.
இந்த நிலையில், நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் அண்ணன் பாண்டியன் என்பவர் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் குன்னம் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். இது மேலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த பாண்டியன், “நீட் தேர்வினால் மருத்துவராகும் வாய்ப்பை என் சகோதரி அனிதா இழந்துள்ளார். அதற்காக அவர் நீதிமன்றம் வரை சென்று வாதாடினார், பலன் இல்லாததால் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொண்டார். இதற்காக பல போராட்டங்கள் நடத்தியும் நீட் தேர்வு முறையை ரத்து செய்ய முடியவில்லை. இந்தக் காரணத்தை முன்னிட்டு நான் தேர்தலில் போட்டியிடுகிறேன். நான் வெற்றி பெற்றால் நீட் தேர்வு ரத்து செய்ய சட்டமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்துவேன். அனிதாவின் இறப்பு எங்கள் குடும்பத்தினரை பெரிதும் தவிக்க வைத்துள்ளது. இதுபோன்று துன்பத்தை மற்ற குடும்பத்தினரும் அனுபவிக்கக்கூடாது, அதற்காகவே தேர்தலை சந்திக்கிறேன்” என்று பாண்டியன் கூறியுள்ளார்.
இந்த நிலையில் அனிதாவின் தந்தை சண்முகம் பத்திரிகையாளர்களைச் சந்தித்த போது, “எனது மூன்றாவது மகன் பாண்டியன், அவர் கருத்து வேறுபாடு காரணமாக எங்கள் குடும்பத்திலிருந்து தனியாகப் பிரிந்து சென்று தங்கியுள்ளார். எங்கள் குடும்பத்தினர் மீது உள்ள கருத்து வேறுபாடுகள் காரணமாக பகுஜன் சமாஜ் கட்சியினருடன் சேர்ந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இளம் வயது பையன், அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு அந்தக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள், தந்தையான என்னிடமோ, எங்கள் குடும்பத்தினரிடமோ கருத்து கேட்டிருக்க வேண்டும். எனவே, பகுஜன் சமாஜ் கட்சி மாற்று வேட்பாளரை அறிவிக்க வேண்டும். இதற்கு மேலும் பாண்டியன் அரசியலில் ஈடுபடுவது உறுதியானால், அவர் எந்த காரணத்துக்காகவும் இறந்துபோன அனிதாவின் பெயரையோ படத்தையோ பயன்படுத்தக்கூடாது” என்று அறிவித்துள்ளார்.