திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பழைய வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் அதே பகுதியில் உள்ள அவருக்குச் சொந்தமான நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணை நடத்தி வரும் நிலையில், இவரது பண்ணையில் புகுந்த மர்ம விலங்கு நிலத்தில், பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆடுகளை கடித்து குதறியதில் 8 ஆடுகள் குடல் சரிந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இதையடுத்து, இன்று காலை நிலத்திற்குச் சென்ற ராஜேஷ் ஆடுகள் இறந்து கிடப்பது பார்த்து அதிர்ச்சியடைந்து வாணியம்பாடி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் கால் தடத்தை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடந்த மாதம் திருப்பத்தூர் நகர பகுதியி்ல் புகுந்த சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து, வாணியம்பாடி அருகே உள்ள தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியான மாதகடப்பா பகுதியில் சிறுத்தையை வனத்துறையினர் விட்டிருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்னபள்ளிகுப்பம் பகுதியில் சிறுத்தையை கண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இன்று வாணியம்பாடியில் உள்ள நிலத்தில் புகுந்து ஆடுகளை மர்ம விலங்கு கடித்துக் கொன்றுள்ளது. ஏற்கனவே கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் சிறுத்தை இரண்டு நாட்களாக ஆடு, மாடுகள் மற்றும் நான்கு பேரை கடித்து நிலையில் தற்போது மீண்டும் அதேபோன்று ஒரு சம்பவம் நடந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.