திண்டுக்கல்லில் உள்ள பிரபல தனியார் நிறுவன பங்குதாரரிடம் 50 லட்சம் கேட்டு மிரட்டியதாக கட்சி நிர்வாகி உள்பட 3 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திண்டுக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு அணில் சேமியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் பங்குதாரர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.
அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த மாதம் என் செல்போனில் தொடர்பு கொண்ட ஒருவர் தனது பெயர் தமிழ் நேசன் என்றும் தமிழ் தேசிய கட்சி நிர்வாகி என்றும் கூறினார். மேலும் எங்கள் நிறுவனத்தில் தரமற்ற முறையில் சேமியா பாக்கெட் செய்வதாகவும் அது பற்றிய வீடியோ, புகைப்படம் இருப்பதாகவும் கூறினார். அதை வெளியிடாமல் இருப்பதற்கு 50 லட்சம் கொடுக்கும்படி கேட்டு மிரட்டினார். அதற்கு நான் மறுத்து விட்டேன்.
மேலும் இந்த கட்சியின் மற்றொரு நிர்வாகி என்று சிவகுமார் என்பவர் பேசினார். அப்போது எங்களின் மற்றொரு பங்குதாரரின் செல்போன் எண்ணை கேட்டார். நான் பங்குதாரர் செல்போன் எண்ணை கொடுக்கவில்லை. அதன் பின்னர் எனது வாட்ஸ்அப் எண்ணுக்கு ஐந்து வீடியோக்கள் 14 படங்கள் வந்தன. அதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தேன். மேலும் அதுபற்றி விசாரித்தபோது, வேடசந்தூர் தாலுகாவில் செயல்படும் ஒரு தனியார் நிறுவனத்தில் வைத்து மோசடியாக வீடியோக்கள் புகைப்படங்கள் எடுத்தது தெரியவந்தது. பணம் கொடுக்க மறுத்ததால் வீடியோ, புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டு உள்ளனர். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தார்.
இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உத்தரவிட்டார். அதன்பேரில் தமிழ்நேசன், சிவகுமார் மற்றும் தனியார் நிறுவன உரிமையாளர் ஸ்ரீதர் ஆகிய 3 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த மூன்று பேரையும் தேடி வருகிறார்கள்.