/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ani_2.jpg)
சென்னை பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (22). இவர் அந்த பகுதியில் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று பெசன்ட் நகர் சாலையோர நடைபாதையில் படுத்திருந்தார். இவர் மது அருந்திவிட்டு போதையில் படுத்து உறங்கியதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த சொகுசு கார், சாலையோரம் படுத்திருந்த சூர்யா மீது ஏறி விபத்துக்குள்ளானது. இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சூர்யா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள், காரை மறிக்க முயன்ற போது காரில் இருந்த இரண்டு பெண்களும் அங்கிருந்து காருடன் தப்பி சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த சூர்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மதுபோதையில் சாலையோரம் படுத்திருந்த இளைஞர் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே காருடன் தப்பிச் சென்ற இரண்டு பெண்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், பெசண்ட் நகர் பகுதியைச் சேர்ந்த பீடா மாதுரி (32) என்பவர் தான் காரை ஓட்டி வந்தது என தெரியவந்தது. மேலும், அவர் ஆந்திரப் பிரதேசம் மாநிலம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி பீடா மஸ்தான் ராவின் மகள் எனவும் தெரியவந்தது.
இதனையடுத்து, பீடா மாதுரி மீது விபத்தின் மூலம் மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், அவரிடம் காரில் வந்த மற்றொரு பெண் யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, இது பிணையில் வரக்கூடிய சட்டப்பிரிவு என்பதால் காவல் நிலைய பிணையில் பீடா மாதுரி விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)