Skip to main content

முல்லை பெரியார் அணை விவகாரம்; மத்திய அரசின் நடவடிக்கைக்கு அன்புமணி வரவேற்பு

Published on 28/05/2024 | Edited on 28/05/2024
Anbumani welcomes central govt action on the Mullai periyar dam issue

முல்லைப் பெரியாறு புதிய அணைக்கு சுற்றுச்சூழல் அனுமதி குறித்து விவாதிக்கவிருந்த வல்லுனர் குழு கூட்டம் ரத்து வரவேற்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமனி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய  அணையைக் கட்டுவதாலும், புதிய அணைக் கட்டப்பட்ட பிறகு இப்போதுள்ள பழைய அணையை இடிப்பதாலும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கான வரம்புகளை நிர்ணயிக்க வேண்டும் என்ற  கேரள அரசின் விண்ணப்பம் குறித்து ஆய்வு செய்து முடிவெடுப்பதற்காக டெல்லியில் இன்று நடைபெறவிருந்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின்  வல்லுனர் குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

’’முல்லைப் பெரியாறு அணை மிகவும் வலிமையாக உள்ளது. அங்கு புதிய அணை கட்டினால் எவ்வளவு வலிமையாக இருக்குமோ, அதைவிடக் கூடுதல் வலிமையுடன் இப்போதைய அணை உள்ளது. எனவே, புதிய அணை தேவையில்லை. மாறாக அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்’’ என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் புதிய அணை  கட்ட வேண்டும் என்று கேரள அரசு கூறுவது தவறு.  அதை வலியுறுத்தி  கேரள அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தை வல்லுனர் குழுவின் ஆய்வுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுப்பியது அதை விட தவறு ஆகும். வல்லுனர் குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதன் மூலம் அந்தத் தவறு சரி செய்யப்பட்டிருக்கிறது.

Anbumani welcomes central govt action on the Mullai periyar dam issue

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வல்லுனர் குழு கூட்டம்  மீண்டும் நடைபெற்றாலும் கூட, அதில் முல்லைப் பெரியாறு  அணை குறித்து எந்த விவாதமும் நடைபெறக் கூடாது. இன்று நடைபெறவிருந்த வல்லுனர் குழு கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலில்  சேர்க்கப்பட்டிருந்த  முல்லைப்பெரியாறு புதிய அணைக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு  குறித்து ஆய்வு செய்வதற்கான வரம்புகளை நிர்ணயிக்க வேண்டும் என்ற கேரள அரசின் கோரிக்கை நீக்கப்பட வேண்டும்.   அதை உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும்  தமிழக அரசுக்கு தான் உண்டு.

முல்லைப் பெரியாறு புதிய அணை சிக்கல் குறித்து மத்திய சுற்றுச்சூழல்  அமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அது போதுமானதல்ல.  ஒவ்வொரு முறை வல்லுனர் குழு கூட்டம் நடைபெறும் போது அதில்  முல்லைப் பெரியாறு அணை குறித்து விவாதிக்கப்படாமல் தடுப்பது  பெரும் போராட்டமாக இருக்கும். உச்சநீதிமன்றத்தில்  வழக்குத் தொடர்ந்து வல்லுனர் குழு கூட்டத்தில் முல்லைப் பெரியாறு புதிய அணை குறித்து விவாதிக்க தடை பெறுவது தான் முழுமையானத் தீர்வாக இருக்கும். எனவே, அதற்கான நடவடிக்கைகளை  தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்