/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/anbumani-mic-pm-art_0.jpg)
பயணிகளை கொள்ளையடிக்கும் ஆம்னி பேருந்துகள். குறட்டை வீட்டு தூங்கும் திமுக அரசு. கட்டணக் கொள்ளைக்கு துணை போகும் மர்மம் என்ன? என பா.ம.க. தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பொங்கல் திருநாளைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மக்களிடம் தனியார் ஆம்னி பேருந்துகள் வரலாறு காணாத கட்டணக் கொள்ளையை நடத்தி வருகின்றன. பொங்கல் திருநாளுக்கு சொந்த ஊருக்கு செல்வதற்காக வசூலிக்கப்பட்டக் கட்டணத்தை விட மிக அதிகமான கட்டணம் சென்னைக்கு திரும்பி வருவதற்காக வசூலிக்கப்படும் நிலையில், இந்தக் கட்டணக் கொள்ளையை தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருக்கிறது திராவிட மாடல் அரசு. கட்டணக் கொள்ளைக்கு திமுக அரசு துணை போவது கண்டிக்கத்தக்கது.
மதுரையிலிருந்து சென்னைக்கு அதிகபட்சமாக ரூ.3950 கட்டணம் நிர்ணயிக்கப்படுள்ளது. நெல்லையிலிருந்து சென்னைக்கு ரூ.4500, கோவையிலிருந்து சென்னைக்கு ரூ.5,000, நாகர்கோயிலில் இருந்து ரூ.3,899 கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஆம்னி பேருந்து முன்பதிவுக்கான இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்தையும் விட குறைந்த தொலைவு கொண்ட திருச்சியிலிருந்து சென்னைக்கு வருவதற்கு ரூ.4000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது இயல்பாக அரசுப் பேருந்துகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை விட 6 முதல் 8 மடங்கு வரையிலும், தனியார் பேருந்துகளின் கட்டணத்தை விட 4 முதல் 6 மடங்கு வரையிலும் அதிகமாகும்.
தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் அதைத் தடுக்க வேண்டிய முதல் கடமை அரசுக்குத் தான் உள்ளது. ஆனால், அந்தக் கடமையை நிறைவேற்றுவதில் தமிழக அரசு முற்றிலுமாக தோல்வியடைந்து விட்டது. வழக்கம் போலவே பொங்கல் திருநாளுக்கு முன்பாக, அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆவேசமான வசனங்களுடன் தமிழக அரசிடமிருந்து அறிக்கை வந்தது. அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் குறித்து 1800 425 6151, 044-24749002, 044-26280445, 044-26281611 ஆகிய தொலைபேசி எண்களில் புகார் செய்யலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், இந்த எண்களை தொடர்பு கொண்டால், ‘நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் உங்கள் அழைப்பை ஏற்கும் நிலையில் இல்லை. அதனால் சிறிது நேரம் கழித்து தொடர்பு கொள்ளவும்’ என்று மட்டுமே பதில் கிடைத்ததாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து ஆணையர் ஷன்சொங்கம் ஜடாக் சிரு உள்ளிட்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தடுக்க வேண்டிய அரசும், அதிகாரிகளும் எந்த அளவுக்கு விழிப்புடன் செயல்படுகிறார்கள் என்பதற்கு இது தான் எடுத்துக்காட்டு ஆகும். கட்டணக் கொள்ளை குறித்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்ட பிறகு தமிழக அரசின் சார்பில் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்ட பேருந்துகள் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கண் துடைப்பு அறிவிப்பு வெளியாகும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tn-sec-art_69.jpg)
கட்டணக் கொள்ளையில் ஈடுபட்ட பேருந்துகள் மீது எவ்வளவு அபராதம் வசூலிக்கப்பட்டிருக்கிறது என்று பார்த்தால் சராசரியாக ஒரு பேருந்துக்கு ரூ.1750 மட்டும் தான் வசூலிக்கப்பட்ட்டிருக்கும். ஒரு பயணியிடம் ரூ.5000 என்ற அளவுக்கு கட்டணக் கொள்ளை நடத்தும் பேருந்துகளிடம் ரூ.1750 மட்டும் அபராதம் வசூலிக்கப்பட்டால், தனியார் பேருந்துகள் எவ்வாறு திருந்தும்?. கட்டணக் கொள்ளையை எவ்வாறு தடுக்க முடியும்?. கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்காமல், கட்டணக் கொள்ளைக்கு திமுக அரசு துணை போவது ஏன்?. தமிழக அரசின் பணி என்பது மக்களின் நலன்களை காப்பது தானே தவிர, தனியார் பேருந்துகளின் நலன்களைக் காப்பது அல்ல. இதை உணர்ந்து கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பல முறை அளித்தத் தீர்ப்பை செயல்படுத்தும் வகையில் ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணத்தை தமிழக அரசே நிர்ணயிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)