Skip to main content

“மணல் கொள்ளையைத் தடுத்த கோட்டாட்சியரைக் கொல்ல முயற்சி” - அன்புமணி கண்டனம்

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
 Anbumani Ramadoss emphasized wants to crack down on sand mafia

தமிழகத்தில் ஆளும் கட்சி ஆதரவுடன் செயல்படும் மணல் மாஃபியாக்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம் வளையப்பட்டி பகுதியில் சரக்குந்து மூலம் மணல் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கடத்தல் கும்பலைப் பிடிப்பதற்காக அங்கு விரைந்த இலுப்பூர்  கோட்டாட்சியர் தெய்வநாயகியின் மகிழுந்து மீது சரக்குந்தை மோதி கொலை செய்ய மணல் கடத்தல் கும்பல் முயற்சி செய்துள்ளது. மணல் சரக்குந்து மோதியதில் வட்டாட்சியர் பயணித்த மகிழுந்து சேதம் அடைந்த நிலையில்,  மணல் சரக்குந்தை பின்னோக்கி இயக்கி வந்து  மீண்டும் மோத மணல் கடத்தல் கும்பல் முயன்றுள்ளது. மகிழுந்தின் ஓட்டுநர் சாமர்த்தியமாகச்  செயல்பட்டு, மகிழுந்தை இடதுபுறமாகத் திருப்பியதால் கோட்டாட்சியரும், அவரது உதவியாளர்களும் தப்பியுள்ளனர். கோட்டாட்சியர் மீதான கொலை முயற்சி கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் மணல் கடத்தல் கடந்த சில ஆண்டுகளாகத் தலைவிரித்து ஆடுகிறது. அதிகாரப்படிநிலையில் உயர்ந்த இடத்தில் உள்ள கோட்டாட்சியரையே கொலை செய்யும் அளவுக்கு மணல் கடத்தல் கும்பல் துணிகிறது என்றால் அவர்களுக்கு  எந்த அளவுக்கு ஆட்சியாளர்களின் ஆதரவு இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆளுங்கட்சியினர் கொடுக்கும் தைரியத்தால் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் மணல் கடத்தல் கும்பல்கள் மாஃபியாக்களாக மாறி வருகின்றனர். இது இயற்கை வளங்களுக்கு மட்டுமின்றி  சமுக அமைதிக்கும் மிகப்பெரிய  ஆபத்து ஆகும்.

மணல் மாஃபியாக்களால் தமிழ்நாட்டின் பொது அமைதி எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறது என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியில் மணல் கொள்ளைக்கு எதிராக செயல்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அவரது அலுவலகத்தில் வைத்துக் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டார்.

அதன்பின் சேலம் மாவட்டம் மானாத்தாள் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தக் கிராம நிர்வாக அலுவலரை வெட்ட  கடத்தல் கும்பல் அரிவாளுடன் துரத்தியது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகில் சின்ன தோட்டாளம் என்ற இடத்தில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற காவல்துறை சிறப்பு சார் ஆய்வாளர் மணவாளன் என்பவரை  மணல் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் கடுமையாக தாக்கி கொலை செய்ய முயன்றது,  வேலூர் மாவட்டத்தின் அணைக்கட்டுப் பகுதியில் பொன்னையாற்றிலிருந்து மணல் கொள்ளையடிக்கப்படுவதைப் படம் பிடித்த ஓய்வு பெற்ற இராணுவ வீரர் உமாபதியை மணல் கடத்தல் கும்பல் அரிவாளால் வெட்டி காயப்படுத்தியது என மணல் கடத்தல் கும்பல்களின் அட்டகாசங்கள் தொடர்கின்றன.

இப்போதும் கூட இலுப்பூரில் வருவாய் கோட்டாட்சியரை கொலை செய்ய முயன்ற மணல் கடத்தல் கும்பலையும், அதன் பின்னணியில் இருப்பவர்களையும்  கைது செய்யவோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ தமிழக அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மாறாக கோட்டாட்சியர் மீதான கொலை முயற்சி குறித்த செய்திகள் ஊடகங்களில் வராமல் தடுப்பதில்தான் ஆர்வம் காட்டினார்கள். முறப்பநாட்டில் மணல் கொள்ளையர்களால் கொல்லப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு ரூ.1 கோடி நிதி கொடுத்ததைத் தவிர, மணல் கொள்ளையைத் தடுக்கவும், மாபியாக்களின் அட்டகாசத்தை ஒடுக்கவும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மணல் கடத்தலை தடுக்க முயலும் அதிகாரிகளைக் கொல்ல முயற்சிகள் நடப்பதை அரசின் மீதான போராகக் கருதி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் அட்டகாசம் செய்யும் மணல் கொள்ளையர்களை இரும்புக் கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும். மாறாக, அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டால், ஆட்சியாளர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

'வரவேற்பும்; ஏமாற்றமும்' - மத்திய பட்ஜெட் குறித்து பாமக ராமதாஸ் கருத்து

Published on 23/07/2024 | Edited on 23/07/2024

 

'Welcome; Disappointing'-pmk Ramadoss comments on Union Budget


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (22.07.2024) தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் நடைபெறவுள்ளது. இந்நிலையில் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (23.07.2024) காலை 11 மணிக்கு தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார்.  

மத்திய அரசின் பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் வரிகுறைப்பு, வேலைவாய்ப்புத் திட்டங்கள் வரவேற்கத்தக்கவையாகவும், தமிழகத்திற்கான   திட்டங்கள் இல்லாதது ஏமாற்றத்தை அளிப்பதாகவும் பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.  

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தங்கம், வெள்ளி, செல்பேசிகள் உள்ளிட்ட பொருட்களின் மீதான சுங்கவரி குறைக்கப்பட்டிருப்பது, இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் கல்விக்காக புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது, வேளாண்துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருப்பது போன்றவை வரவேற்கத்தக்கவை. அதேநேரத்தில் சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையிலான பழைய வருமானவரி முறையில் எந்த மாற்றமும் செய்யப்படாததும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாததும் ஏமாற்றம் அளிப்பவையாக உள்ளன.

ஒரு நாட்டின் வளர்ச்சியைக் கடந்து மக்களின் நலனை உறுதி செய்ய வேண்டும் என்றால், கல்வி, சுகாதாரம், வேளாண்மை ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். 2023&24ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிலையான நிதிநிலை அறிக்கையில் இந்த 3 துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், புற்றுநோய் மருந்துகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

'Welcome; Disappointing'-pmk Ramadoss comments on Union Budget

வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளுக்கான  நிதி ஒதுக்கீடு ரூ.1.52 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வேளாண் ஆராய்ச்சி ஊக்குவிக்கப்படும், காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய, அதிக விளைச்சல் தரக்கூடிய 109 பயிர் வகைகள் அறிமுகம் செய்யப்படும், அடுத்த இரு ஆண்டுகளில் ஒரு கோடி உழவர்கள் இயற்கை விவசாயத்திற்கு மாற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், ஊரக வளர்ச்சித்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.2.66 லட்சம் கோடியாக அதிகரிக்கப்படும், ஏழைக் குடும்பங்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் இலவசமாக அரிசி வழங்கும் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்பன போன்ற அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கவை. இவை வேளாண் வளர்ச்சிக்கும், கிராமப்புற வறுமை ஒழிப்புக்கும் வழி வகுக்கும்.

அடுத்து வரும் ஆண்டுகளில் 4 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக ரூ.2 லட்சம் கோடி செலவிடப்படும், ஒரு கோடி இளைஞர்களுக்கு மாதம் ரூ.5,000 உதவித் தொகை, ஒருமுறை உதவியாக ரூ.6,000 நிதியுடன் தொழில் பழகுநர் பயிற்சி அளிக்கப்படும், முதல் முறையாக வேலைக்கு செல்லும் இளைஞர்களுக்கு முதல் மாதத்தில் மட்டும் இரட்டை ஊதியம் வழங்கப்படும், அரசின் வேறு எந்த சலுகைகளையும் பெறாதவர்களுக்கு கல்விக் கடனாக ரூ.10 லட்சம் வரை வழங்கப்படும், தொழிலாளர்கள் தங்குவதற்காக வாடகை வீடுகள் கட்டித்தரப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கவை.

தங்கம் மற்றும் வெள்ளி கடத்தலைத் தடுக்க அவற்றின் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தது. தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி முழுமையாக குறைக்கப்படவில்லை என்றாலும் கூட, 15 விழுக்காட்டிலிருந்து  6% ஆக குறைக்கப்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டியதாகும். அதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.4200 வரை குறையக் கூடும். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பது மட்டுமின்றி, தங்கம் கடத்தி வரப்படுவதையும் தடுக்கும். செல்பேசிகள் மற்றும் அவற்றின் உதிரி பாகங்கள் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டிருப்பதால் அவற்றின் விலையும் குறையும்.

நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது வருமான வரிகளில் மாற்றங்கள் செய்யப்படுமா? என்பதைத் தான். புதிய வருமானவரி முறையில் சில மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன. அதனால், ரூ.15 லட்சம் வரை வருவாய் ஈட்டுபவர்களுக்கு ரூ.17,500 வரை மிச்சமாகும் என்பது வரவேற்கத்தக்கது. ஆனால், பழைய வருமான வரி முறையில் எந்த மாற்றமும் செய்யப்படாதது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. புதிய வருமானவரி முறை செலவுகளை ஊக்குவிக்கக்கூடியது, பழைய வருமான வரி முறை சேமிப்பை ஊக்குவிக்கக் கூடியதாகும். புதிய வருமானவரி முறையில் சலுகை  வழங்கியதன் மூலம் செலவுகளை அரசு ஊக்குவிக்கிறது. இது குறுகிய காலத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்றாலும், நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு சேமிப்புகள் தான் கை கொடுக்கும் என்பதால் பழைய வருமானவரி விகிதங்களிலும் அரசு மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

ஆந்திரப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களுக்கு பல சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆந்திராவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்புத் திட்டங்களில் ஒன்றான விசாகப்பட்டினம் & சென்னை இடையிலான தொழில்வழிச் சாலை திட்டத்தால் தமிழ்நாட்டிற்கும் பயன்கள் கிடைக்கும். அதே நேரத்தில் தமிழ்நாட்டிற்காக சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் கோதாவரி & காவிரி இணைப்புத் திட்டம் குறித்தும் எந்த அறிவிப்பும் செய்யப் படாதது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கான தேவைகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிற்கு தேவையான உட்கட்டமைப்புத் திட்டங்கள், பாசனத் திட்டங்கள் போன்றவற்றையும்  மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நிறைவேற்றப்படும் போது சேர்க்க வேண்டும்' என வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.

 

Next Story

பழங்குடி மாணவர்களின் கல்வி வாய்ப்பை பறிப்பதா சமூகநீதி? - ராமதாஸ் கண்டனம்

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
 Ramadoss said Depriving tribal students of educational opportunities is social justice?

பழங்குடி மாணவர்களின் கல்வி வாய்ப்பை பறிப்பதா சமூகநீதி? என தமிழக அரசை பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாக சாடியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் 300&க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 400&க்கும் கூடுதலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அவற்றை நிரப்புவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, அந்தப் பள்ளிகளில் ஏற்கனவே தற்காலிக ஆசிரியர்களாக பணியாற்றி வந்த 300 பேரை பணி நீக்கம் செய்திருக்கிறது. தொலைநோக்குப் பார்வையில்லாத நடவடிக்கைகளின் மூலம் பழங்குடியின மாணவர்களின் கல்வி வாய்ப்பை அரசு பறித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் அங்கமாக இருந்த பழங்குடியினர் நலத் துறை 2000&ஆம் ஆண்டில் தனித்துறையாக பிரிக்கப்பட்டது. ஆனாலும், கூட்டு நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வந்த பழங்குடியினர் நலத்துறை, 01.04.2018&ஆம் நாள் முதல் தான் தனித்த அதிகாரத்துடன் செயல்பட்டு வருகிறது. பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 212 தொடக்கப்பள்ளிகள், 49 நடுநிலைப் பள்ளிகள், 31 உயர்நிலைப் பள்ளிகள், 28 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 320 பள்ளிகள் இயங்கி வருகின்றன.  

இந்தப் பள்ளிகளில் ஏறக்குறைய 30 ஆயிரம் மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். அப்பள்ளிகளில்  210 இடைநிலை ஆசிரியர்கள், 179 பட்டதாரி ஆசிரியர்கள், 49 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்  பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக இருந்தன. அதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்காக 300 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் 6 ஆண்டுகளாக பணியாற்றி வந்தனர். அவர்கள் அனைவரும் சில வாரங்களுக்கு முன் நீக்கப்பட்டது தான் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் பணியாற்றி வந்த 300 தற்காலிக ஆசிரியர்களும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சிறப்பாக பணியாற்றி பள்ளிகளின் கல்வித்தரத்தையும், தேர்ச்சி விகிதத்தையும் அதிகரித்து வந்தனர். இத்தகைய சூழலில் அவர்கள் திடீரென பணி நீக்கப்பட்டதற்காக பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் தெரிவித்துள்ள காரணம் ஏற்றுக்கொள்ள முடியாதது. தகுதித்தேர்வில்  தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே, அவர்கள் பிற வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று கூறித் தான் ஏற்கனவே இருந்த தற்காலிக ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். ஒருவேளை தகுதி பெற்ற ஆசிரியர்களைத் தான் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தாலும் கூட, அதற்காக பின்பற்றப்பட்ட அணுகுமுறை தவறு.

பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதற்கு முன்பாக நிரந்தர ஆசிரியர்களையோ, மாற்று தற்காலிக ஆசிரியர்களையோ நியமிக்க பழங்குடியினர் நலத்துறை  நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், புதிய ஆசிரியர்களையும் நியமிக்க முடியவில்லை. அதனால், பழங்குடியின மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள் பிற பள்ளிகளைப் போல நகரத்துக்கு மத்தியில் அமைந்திருப்பதில்லை. எளிதில் அணுகமுடியாத தொலைதூரப் பகுதிகளில் தான் அவை அமைந்துள்ளன. தற்காலிக ஆசிரியர்களுக்கு மிகக் குறைந்த ஊதியமே தரப்படுவதால் , ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற எவரும் தொலைதூரங்களில் உள்ள பழங்குடியினர் நலப் பள்ளிகளுக்கு சென்று பணியாற்றத் தயாராக இல்லை. அதனால், பழங்குடியின பள்ளிகளின் மாணவர்கள் கற்பிக்க ஆசிரியர்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இந்த நிலைக்கு காரணமான பழங்குடியினர் நலத்துறை இயக்குனர், தமது தவறைத் திருத்திக் கொள்வதற்கு பதிலாக, அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை சுட்டிக்காட்டிய ஆசிரியர்களை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு உள்ளார். ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததையும், தற்காலிக ஆசிரியர்கள் நீக்கப்பட்டதையும் ஊடக நேர்காணல் மூலம் சுட்டிக்காட்டியதற்காக  தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கு குற்றக் குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

சமூகப் படிநிலையின் அடித்தட்டில் உள்ள பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி மறுக்கப்படுவதை விட மோசமான சமூக அநீதி எதுவும் கிடையாது. 30ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிக்காத அரசு, அதை சுட்டிக்காட்டிய ஆசிரியர் சங்க நிர்வாகிகளுக்கு குறிப்பாணை வழங்கி பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. இதுவா திமுக அரசின் சமூகநீதி?

தமிழ்நாடு முழுவதும் உள்ள பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் காலியாக உள்ள 438 ஆசிரியர் பணியிடங்களுக்கு நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை தற்காலிக ஆசிரியர்கள் 300 பேரும் பணியில் தொடர அனுமதிக்க வேண்டும். ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட குறிப்பாணையை  அரசு திரும்பப் பெற வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.