Skip to main content

கந்துவட்டி கொடுமையால் அரசு ஊழியர் தற்கொலை; நடவடிக்கை எடுக்குமா அரசு? - அன்புமணி

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
Anbumani condemns passed away of government employee due to usury

கந்துவட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர் காவல் கண்காணிப்பாளர்  அலுவலகத்தில்  தற்கொலை: சூதாட்டக் கும்பல் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  மருந்தாளுனராக பணியாற்றிய வந்த பூவழகன் என்பவர், கந்துவட்டி கும்பலால் அவமரியாதை செய்யப்பட்டதால், கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விஷம்   குடித்து தற்கொலை செய்து கொண்டது  பெரும் அதிர்ச்சியும், வேதனையும்  அளிக்கிறது. கந்துவட்டி கும்பலின் அட்டகாசம் பல ஆண்டுகளாகத் தொடரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்த அரசும், காவல்துறையும்  நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

சேத்தியாத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவரான பூவழகன், அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தசாமி ஆகியோரிடம் கந்துவட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். வாங்கிய கடனுக்கு வட்டி சேர்த்து,  வாங்கிய தொகையை விட பல மடங்கு பணம் செலுத்திய பிறகும் கூட, இன்னும் பணம்  கேட்டு  கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தசாமி ஆகியோர் மிரட்டியுள்ளனர். ஒரு கட்டத்தில் பூவழகனை கடத்திச் சென்ற அவர்கள், தங்களுக்கு சொந்தமான இடத்தில் முட்டி போட வைத்து கொடுமைப் படுத்தியதுடன்,  தகாத வார்த்தைகளால் திட்டியும் அவமானப்படுத்தியுள்ளனர். அதைத் தாங்க முடியாமல் தான் கடந்த 12-ஆம் நாள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற பூவழகன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று(18.2.2024) உயிரிழந்தார்.

பூவழகனைப் போலவே மேலும் பல நூறு பேருக்கு கடன் கொடுத்து, அதற்கு கந்து வட்டி கேட்டு இந்த கும்பல் மிரட்டி வருவதாகக் கூறப்படுகிறது.  அரசு ஊழியர்கள், வணிகர்கள் ஆகியோரை அடையாளம் கண்டு சூதாட்டத்திற்கு அடிமையாக்கும் இந்த கும்பல்,  சூதாட்டம் விளையாடுவதற்காக லட்சக்கணக்கில் பணத்தை கடனாகக் கொடுத்து கந்து வட்டியை வசூலித்து வருவதாகக் கூறப்படுகிறது. கந்துவட்டி மற்றும் சூதாட்டக் கும்பல் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பூவழகனைப் போல மேலும் பலர் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க முடியாது என்று கூறப்படுகிறது.

பூவழகன் தற்கொலை செய்து கொள்ள முயன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில்,  அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கந்து வட்டி கும்பலைப் பிடித்து விசாரித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் மிரமுகர்கள் தலையிட்டதைத் தொடர்ந்து அவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.  அரசியல் கட்சியினர் அளிக்கும் துணிச்சல் மற்றும் ஆதரவில் தான் கந்துவட்டி கும்பல் தொடர் அட்டகாசத்தில் ஈடுபடுகிறது.  இதை அனுமதிக்கக்கூடாது.

தமிழ்நாட்டில் கந்து வட்டி தடை செய்யப்பட்டுள்ளது.  அதை மதிக்காமல் கந்து வட்டி கும்பலுக்கு ஆதரவாக காவல்துறை செயல்படக் கூடாது. மருந்தாளுனர் பூவழகன் தற்கொலைக்கு காரணமான கந்துவட்டி மற்றும் சூதாட்டக் கும்பலை காவல்துறை கைது செய்து  உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். அவர்களுக்கு ஆதரவளித்த அரசியல் பிரமுகர்கள் மீதும் தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”எனக் குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும்” - அன்புமணி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
“Precautionary measures should be taken to prevent bird flu in Tamil Nadu says Anbumani

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில்,  தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும்  தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை  மேற்கொள்ள வேண்டும்.

கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள்  வரும் சரக்கு வாகனங்களை சோதனையிட்டு  கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெயரளவில் மட்டும் தான் மேற்கொள்ளப்படுவதாகவும், பெரும்பான்மையான வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுவதில்லை என்றும், அதற்குத் தேவையான மனிதவளம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  அதேபோல், கோவை, தேனி மாவட்டங்களையொட்டிய எல்லைப் பகுதிகளில் இத்தகைய பணிகள் எதுவும்  மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.

பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

'அப்பாவி மக்களை இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது'- ராமதாஸ் கருத்து

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 6ஆம் தேதி வரை தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு மற்றும் புதுவையில் மக்களவைத் தேர்தல்கள் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6 ஆம் நாள் வரை தொடரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லாத நிலையில், அதை தொடர்வது மக்களுக்கு பாதிப்புகளையே ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத் தான் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இனி நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லை. இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்னும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பதற்காக தமிழ்நாட்டில் நடத்தை விதிகளை இன்னும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒருவேளை ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தாலோ அல்லது தமிழ்நாட்டில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டிருந்தாலோ வாக்குப்பதிவு முடிந்த சில நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும். அத்துடன் தேர்தல் நடத்தை விதிகளும் முடிவுக்கு வந்திருக்கும். தமிழ்நாட்டில் முதல் கட்ட வாக்குப்பதிவு  நடத்தப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக மற்ற மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிவடையும் வரை தமிழக அரசும், மக்களும் தேவையற்ற கட்டுப்பாடுகளை சுமந்து கொண்டு வாட வேண்டிய தேவையில்லை.

 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 16 ஆம் நாள் வெளியிடப்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஜூன் 6ஆம் நாள் தான் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் என்பதால், அதுவரை நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும். அதாவது தேர்தல் நடைமுறை என்ற பெயரில் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை 83 நாட்களுக்கு முடக்கி வைப்பதையும், அதே காலத்திற்கு அப்பாவி மக்களை பல்வேறு வகைகளில் இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது.

நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் போது ஆட்சியாளர்கள் புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது. மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து அதிகாரிகளுக்கு எந்த வித ஆணைகளையும் பிறப்பிக்க முடியாது; அதிகாரிகளுடன் முதலமைச்சரோ, அமைச்சர்களோ ஆய்வுக்கூட்டங்களைக் கூட நடத்த இயலாது. கடைநிலை பணியாளர்கள் முதல் தலைமைச் செயலர் வரை அனைத்து நிலை அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள். மொத்தத்தில் அரசு நிர்வாகம் என்பது செயல்பட முடியாத அளவுக்கு மொத்தமாக முடக்கப்பட்டிருக்கும். அதனால், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளைக் கூட அரசால் செய்ய முடியாத நிலை உருவாகும்.

தேர்தல் நடத்தை விதிகளால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது வணிகர்கள் தான். சில்லறை வணிகம் செய்யும் வணிகர்கள் அதில் கிடைத்தப் பணத்தை சந்தைக்கு கொண்டு சென்று தான் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர வேண்டும். அவ்வாறு வணிகர்கள் பணத்தைக் கொண்டு செல்லும் போது, அவர்களை மடக்கி சோதனை நடத்தும் பறக்கும் படையினர் வணிகர்களிடம்  ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தாலும் கூட மொத்தப் பணத்தையும் பறிமுதல் செய்கின்றனர். அதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வணிகர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். அவர்களை மேலும் 45 நாட்களுக்கு பாதிப்புகளுக்கு உள்ளாக்குவது நியாயமற்றதாகும்.

எனவே, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்து விட்ட நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டும். மக்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை செயல்படுத்த  தமிழக அரசையும், வணிகத்திற்கு தேவையான பணத்தை தடையின்றி எடுத்துச் செல்ல வணிகர்களையும் தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.