Skip to main content

“இந்திய ஆட்சிப்பணி விதிகளில் திருத்தம்: மாநில உரிமையைப் பறிக்கும் மத்திய அரசு” - விசிக கண்டனம்

Published on 22/01/2022 | Edited on 22/01/2022

 

Amendment to the Indian Administrative Rules: BJP government deprives of state ownership

 

இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளை எப்போது வேண்டுமானாலும் ஒன்றிய அரசின் பணிக்கு அழைத்துக் கொள்ளலாம் என பாஜக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தொல்.திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐஏஎஸ்,  ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகளை எப்போது வேண்டுமானாலும் ஒன்றிய அரசின் பணிக்கு அழைத்துக் கொள்ளலாம் எனப் பாஜக அரசு கொண்டுவரவுள்ள திருத்தத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

 

மாநில உரிமையைப் பறிக்கும் இந்த நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளுக்கான பணி விதிகள் 1954ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டன. மாநில அரசுகளின் கீழ் பணியாற்றும் இந்த அதிகாரிகளை ஒன்றிய அரசுப் பணிகளுக்கு அழைப்பதென்றால் மாநில அரசின் சம்மதத்தோடு அதைச் செய்து கொள்ளலாம் என இந்திய ஆட்சிப்பணி விதிகள் 1954இல் விதி-6 குறிப்பிடுகிறது. இதுவரை அதுவே நடைமுறையில் உள்ளது. ஆனால் இப்போது மாநில அரசு ஒப்புதல் இல்லாமலேயே ஒன்றிய அரசு இந்த அதிகாரிகளை ஒன்றிய அரசுப்பணிக்கு அழைத்துக் கொள்ளலாம் என விதி-6 இல் திருத்தம் செய்வதற்கு பாஜக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

 

இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அவ்வாறு செய்வது மாநில அரசின் உரிமையைப் பறிப்பதாகும். அதுமட்டுமின்றி எப்போது நம்மை டெல்லிக்கு மாற்றல் செய்வார்களோ என இந்த அதிகாரிகளை அச்சத்திலேயே வைத்திருப்பதாகவும் இருக்கும். ஒன்றிய அரசை ஆட்சி செய்யும் கட்சி அல்லாத வேறு கட்சிகள் ஆட்சி செய்யும் மாநில அரசுகளை சீர்குலைப்பதற்கும் இது கருவியாக அமைந்துவிடும். எனவே இந்த ஆபத்தான நடவடிக்கையை உடனடியாகக் கைவிடுமாறு இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம். தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டில் உள்ள ஜனநாயக சக்திகளும் இதற்காகக் குரல் எழுப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

பானை சின்னம்; வி.சி.க. மேல்முறையீடு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
NN

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி.க. மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அதோடு கேரள மற்றும் மகாராஷ்டிராவிலும் வி.சி.க. போட்டியிட உள்ளது. இதனையடுத்து பானை சின்னம் கேட்டு வி.சி.க. சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. வேட்புமனு தாக்கல் இன்று (27.03.2024) முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை வி.சி.க. நாடியது.

அப்போது இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் வி.சி.க.வின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. நேற்று மாலை 05.30 மணியளவில் வி.சி.க. வழக்கறிஞருக்கு தேர்தல் ஆணையம் சார்பில் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் வி.சி.க. 6 சட்டமன்றத் தொகுதிகளில் பானை சின்னத்தில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வி.சி.க. வெற்றி பெற்றதும், கடந்த மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டு வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு விசிக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த பானை சின்னம் வேண்டும் என விசிக  தேர்தல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. கடந்த தேர்தலில் 1.16 சதவிகித வாக்குகளைத் தமிழகத்தில் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டி மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.