கிராம மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம்... சாலை அமைக்கும் பணிகள் நிறுத்தம்திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நாயக்கனேரி ஊராட்சிக்குட்பட்டது பனங்காட்டு ஏரி மலை கிராமம். இந்த கிராமம் ஆம்பூரில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த மலை கிராமத்துக்கு செல்லும் வழியில் வனப்பகுதி ஒன்று உள்ளது. 6 கிலோமீட்டர் தூரம் உள்ள இந்த மலைப்பாதையை கடந்து தான் செல்ல வேண்டும்.
இச்சாலை வழியாக மலைவாழ் மக்கள் தினந்தோறும் ஆம்பூரில் உள்ள மார்க்கெட் பகுதிக்கு காய்கறிகளை ஏற்றி செல்லுகின்றனர். குண்டும், குழியுமாக இச்சாலையை சீரமைத்து புதிய சாலை அமைத்து தரவேண்டுமென இம்மக்கள் போராடி வந்தனர். மேலும் வனத்துறை மற்றும் அரசுக்கு வைத்த கோரிக்கையின் அடிப்படையில், வனத்துறை சார்பில் 90 லட்சம் ரூபாய் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி பிப்ரவரி 17 ந்தேதி முதல் நடந்து வருகிறது. இதில் 20மி.மி கணத்தில் போடவேண்டிய தார் சாலை வெறும் 8மி.மி கணத்தில் சாலை அமைக்கும் பணி நடந்து வந்தது.
மலையில் இதுப்போன்று தரமாற்ற சாலை அமைத்தால் மூன்று மாதங்களில் பழுதாகி விடும் என குற்றம் சாட்டிய அப்பகுதி விவசாயிகள் மற்றும் மலைகிராம மக்கள், சாலை போடும் பணியை தடுத்தி நிறுத்தி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் உயர்அதிகாரிகள் நேரில் வந்து போடப்பட்டுள்ள சாலையை பார்வையிடும் வரை பணிகள் மேற்கொள்ள கூடாது என்று கூறினார். இதனால் சாலை போடும் பணி நிறுத்தப்பட்டது.