திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரம் பாங்கிஷாப் பகுதியில் பர்க்கத்துல்லா மற்றும் அக்பர்பாஷா ஆகியோர் இணைந்து காலனி உதிரி பாகங்கள் தயாரிப்பு கிடங்கு வைத்து நடத்தி வருகின்றனர். ஜனவரி 12ஆம் தேதி இரவு வழக்கம்போல் வேலை முடித்து கிடங்கு மூடி விட்டு வீட்டிற்க்கு சென்றனர் உரிமையாளர்கள்.
நள்ளிரவு 11.30 மணிக்கு கிடங்கில் தீ பிடித்து எரிந்துள்ளது. இதனைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர். உரிமையாளரகளுக்கும் தகவல் கூறியுள்ளனர். தகவலின் பேரில் ஆம்பூர் தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது தீயணைப்பு வாகனம் பழுதாகி நின்றது. இதனால் அதிர்ச்சியான பொதுமக்கள் வாகனத்தை தள்ளிச் சென்று விட்டனர். அதன்பின்னர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர் தீயணைப்பு வீரர்கள். அப்போதும் தீயை அணைக்க முடியவில்லை. அதனை தொடர்ந்து வாணியம்பாடி, பேர்ணாம்பட்டு ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 தீயணைப்பு வாகனங்கள் வரவைக்கப்பட்டது. அவைகள் சுமார் 8 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தால் காலனி தாயரிக்க பயன்படும் ஷீலேஸ், காலனி உதிரி பாகங்கள், இரசாயனங்கள் என சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்துப்போனது. மேலும் கிடங்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் மற்றும் இரண்டு சக்கர வாகனம் சேதமடைந்தன. தீ வெப்பத்தால் சுமார் நூறு மீட்டர் சுற்றி உள்ள வீடுகளில் இருந்த தண்ணீர் தொட்டி மற்றும் சுவற்றுகளில் விரிசல் காணப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்ட கிடங்கு குடியிருப்பு பகுதியாக இருந்ததால் பாதுகாப்பு கருதி அக்கம்பக்கத்தினர் வீட்டை விட்டு வெளியேற்றினர். தீ விபத்து குறித்து கிடங்கு உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 3 பேர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.