சென்னை - பெங்களூரு தேசிய தங்க நாற்கர சாலை திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகரம் வழியாகச் செல்கின்றன. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியே ஆம்பூர் பேருந்து நிலையம் இருப்பதால் பேருந்துகள் சாலையிலேயே நின்று பயணிகளை ஏற்றிச் செல்வதும், இறக்கி விடுவதுமாக உள்ளன. இதனால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. அதிகப் போக்குவரத்தால் நகரப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் விபத்துக்கள் நடைபெறுகின்றன. இதனால் இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக மேம்பாலம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை வைத்து வந்தனர்.
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணியின் மாநில அமைப்பாளருமான கதிர் ஆனந்த், தேர்தல் நேரத்தில் பொதுமக்களுக்கு தந்த தேர்தல் வாக்குறுதியின்படி தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திடம் முறையிட்டு போராடி மேம்பாலம் அமைப்பதற்கான உத்தரவினையும், நிதியினையும் பெற்றார். தற்போது ராஜீவ் காந்தி சிலை முதல் கஸ்பா பகுதி வரை சுமார் 1.5 கி.மீ தூரத்திற்கு மேம்பாலம் கட்டுமான பணி சாலையின் நடுவே பில்லர் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
பெங்களூர், கிருஷ்ணகிரி, ஓசூரில் இருந்து சென்னைக்கு செல்லும் பேருந்துகள், வாகனங்கள் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் நின்று பயணிகளை இறக்கிவிட்டும், ஏற்றிக்கொண்டும் செல்கின்றன. சென்னை, வேலூரிலிருந்து பெங்களூரு மார்க்கமாக செல்லும் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குச் செல்ல முடியாத நிலையில் சாலையின் நடுவே சென்டர் மீடியன் தடுப்பு இருப்பதால் சாலையின் ஓரம் நின்றே பயணிகளை இறக்கி ஏற்றிச் சென்றன. அது பேருந்து நிலையத்துக்கு எதிரே நடந்ததால் பேருந்து நிலையத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின்விளக்கு வெளிச்சம் இருட்டை பகலாக்கின, இதனால் பயணிகள் பாதுகாப்பாக இருந்தனர்.
இப்போது மேம்பாலப் பணிகள் நடைபெறுவதால் சென்னை டூ பெங்களுரூ மார்க்கத்தில் பேருந்து நிற்கும் பகுதியாக ரயில் நிலைய நுழைவாயில் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இங்கு மின்விளக்கு வசதியே இல்லை. ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்ட கழிவறை பல ஆண்டுகள் ஆகியும் மூடியே வைக்கப்பட்டுள்ளன. இதனால் அவசரத்துக்கு கூட சிறுநீர் கழிக்க முடிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இருட்டில் பயந்து கொண்டு அந்த இடத்தில் நிற்கின்றனர். இந்த மேம்பால வேலை முடிய இன்னும் பல மாதங்கள் ஆகும். அதனால் பேருந்து நிறுத்தத்தை அதே மார்க்கத்தில் ரயில் நிலையத்தில் இருந்து 400 மீட்டர் தள்ளி இந்து மேல்நிலைப் பள்ளிக்கு எதிரே காலியிடம் உள்ளது. அந்த இடத்தில் தற்காலிக பேருந்து நிறுத்தமாக உருவாக்கி மின்விளக்கு, குடிதண்ணீர், கழிப்பறை வசதி செய்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.