தென்காசி மாவட்டம், பாஞ்சாங்குளம் எனும் கிராமத்தில் பள்ளிக்கு சென்ற பட்டியலின மாணவர்கள் அந்த ஊரில் இருக்கும் பெட்டிக்கடையில் தின்பண்டங்கள் வாங்க சென்றபோது அந்த கடையிலிருந்தவர் அவர்களுக்கு தின்பண்டங்கள் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது.
அந்த வீடியோ பதிவில், “போங்க போய் உங்க வீட்ல போய் சொல்லுங்க. தின்பண்டம் கொடுக்க மாட்டேங்கிறாங்கன்னு. தின்பண்டம் கொடுக்க மாட்டாங்க டா. ஊர்ல கட்டுப்பாடு வந்துருக்கு. ஊர்ல ஒரு கூட்டம் போட்டு பேசி இருக்கு உங்க தெருல யாருக்கும் எதுவும் கொடுக்க கூடாதுனு சொல்லி. இனிமே இங்க யாரும் வந்து தின்பண்டம் வாங்க வேண்டாம். போங்க” என அந்த கடைக்காரர் பேசி இருந்தார்.
இதனை தொடர்ந்து அந்த பகுதிக்கு விரைந்த போலீசார் இருவரை கைது செய்தனர். மேலும் அந்த கடைக்கு சீல் வைத்தனர். அந்த ஊருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய பள்ளியிலும் சாதிய பாகுபாடுகள் கடைபிடிக்கப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில் இன்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அந்த பள்ளியில் சோதனை நடத்தினர்.
சோதனையின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அதிகாரிகள், “பள்ளியில் இன்று வருகை தந்த மாணவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆசிரியர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது பள்ளியில் தனியாக இருக்கைகள் இல்லை. அனைத்து மாணவர்களும் சமமாக அமர்ந்து படிக்கும் சூழலே உள்ளது. அந்த வகையில் இந்த புகார் ஆதாரமற்றதாக உள்ளது. விசாரணை தொடர்பான அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்படும்” எனவும் குறிப்பிட்டார். இதனை தொடர்ந்து தென்காசி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சுப்புலட்சுமியும் பள்ளியில் சோதனை நடத்தினார்.