




மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி 13வது நாளாக, இன்றும் (08.12.2020) விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், டிசம்பர் 8ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெறும் என விவசாயிகள் அறிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று, விவசாயப் போராட்டங்களுக்கு ஆதரவாக நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில், கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும், அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் நாடுமுழுவதும் மறியல் போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டுவருகின்றனர்.
சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை அருகே விவசாயிகள் போராட்டத்திற்கு, ஆதரவாக அனைத்துக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் தி.மு.க எம்.எல்.ஏ மா.சுப்பரமணியம் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தை தலைமையேற்று நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின் நடுவே, சிலர் சாலைமறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.