Skip to main content

“தகுதியான அனைத்து இல்லத்தரசிகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்” - அமைச்சர் சக்கரபாணி

Published on 28/07/2023 | Edited on 28/07/2023

 

All deserving housewives will be given one thousand rupees says Minister Chakrapani

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள, ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேல்கரைபட்டி ஊராட்சி, மேல்கரைபட்டி நால்ரோடு, ராஜாம்பட்டி ஊராட்சி, புஸ்பத்தூர் ஊராட்சியில் வி.வி.நகர் மற்றும் கண்டியகவுண்டன்புதூர் ஆகிய பகுதிகளில் புதிய பகுதி நேர நியாயவிலைக்கடைகளை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார்.

 

அதன்பின் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் சிறப்பான ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். 5 பவுனுக்குக் குறைவான நகைக்கடன்கள், கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழு பெற்ற கடன்கள், விவசாயிகளின் ரூ.12,000 கோடி கடன்களைத் தள்ளுபடி செய்தார். தமிழக மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அதைத் தொடர்ந்து செயல்படுத்தி, இந்தியாவிலேயே தலைசிறந்த முதல்வராகத் திகழ்கிறார். தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு, தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார்.

 

தமிழகத்தில் குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது புதிய குடும்ப அட்டை பெற ஆன்லைனில் விண்ணப்பித்தால் வீட்டிற்குத் தபாலில் குடும்ப அட்டை வந்து சேரும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் தமிழகத்தில் இதுவரை சுமார் 15 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. குடும்ப அட்டை எதிர்பாராதவிதமாகத் தொலைந்து போனால், புதிய குடும்ப அட்டை பெற ஆன்லைனில் விண்ணப்பித்தால் வீட்டிற்குத் தபாலில் குடும்ப அட்டை வந்து சேரும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், நியாயவிலைக்கடைகளில் கைரேகைப் பதிவு மூலம் பொருட்கள் வாங்கும்போது சில சிரமங்கள் ஏற்படுகின்றன. அவற்றைத் தவிர்க்கும் வகையில் விரைவில் கண் கருவிழி மூலம் பதிவு மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள் என நியாயவிலை கடைக்குச் செல்ல முடியாதவர்கள், பொருட்கள் வாங்க வேறு ஒரு நபரை நியமித்து விண்ணப்பம் அளித்தால், அந்த நபரிடம் பொருட்கள் வழங்கப்படும். அந்த வகையில் தமிழகத்தில் சுமார் 4 இலட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். பொதுமக்கள் குடிமைப்பொருட்களைப் பெறுவதற்காக நீண்ட தூரம் சென்று சிரமப்படுவதைத் தவிர்க்கும் வகையில் அவர்கள் குடியிருப்புகளுக்கு அருகிலேயே குடிமைப்பொருட்களைப் பெற்றுப் பயன்பெறும் வகையில், புதியதாக நியாயவிலைக்கடைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் சுமார் 1,500 கடைகள் பிரிக்கப்பட்டு புதியதாக முழுநேரம் மற்றும் பகுதிநேர நியாயவிலைக்கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் 1,157 நியாயவிலைக்கடைகள் மற்றும் 6,87,171 குடும்ப அட்டைகள் உள்ளன. 

 

திண்டுக்கல் மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட நியாயவிலைக்கடைகள் பிரிக்கப்பட்டு, புதிதாகப் பகுதி நேரம் மற்றும் முழு நேர நியாயவிலைக்கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது தனியார் வாடகைக் கட்டடங்களில் செயல்படும் இந்தப் புதிய நியாயவிலைக் கடைகளுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்ட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நியாயவிலைக்கடைகளில் தரமான அரிசி, பருப்பு, எண்ணைய், சர்க்கரை போன்ற பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் மாதந்தோறும் 2.24 கோடி நபர்களுக்கு 3.40 மெ.டன் தரமான அரிசி வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு தரமான அரிசி வழங்க வேண்டும் என்பதற்காக கலர்டாப்ளர் இயந்திரம் பொருத்தப்பட்ட அரிசி ஆலைகளில் மட்டுமே நெல் அரவை செய்யப்பட்டு, அரிசி கொள்முதல் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. 

 

அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதேபோல் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 18.50 லட்சம் குழந்தைகள் பயன்பெறுவர். இத்திட்டத்தில், காலைச் சிற்றுண்டியில் வழங்க வேண்டிய உணவு வகைகளைத்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பட்டியலிட்டு, அதன்படி வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் ஆட்சியில் மகளிருக்கு சொத்தில் சம உரிமை, வேலைவாய்ப்பில் முன்னுரிமை, உள்ளாட்சி அமைப்பில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு செயல்படுத்தப்பட்டன. அந்த வகையில், முதலமைச்சர் தற்போது மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார். தகுதியான இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 15 ஆம் தேதி  முதலமைச்சரால்  தொடங்கி வைக்கப்படவுள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தகுதியான அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்படும். ஒட்டன்சத்திரம், பழனி சட்டமன்றத் தொகுதிக்கு காவிரி நீர் ஆதாரத்தைக் கொண்டு கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்த ரூ.930 கோடி மதிப்பீட்டிலான குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் வரும் 30 ஆண்டு காலங்களுக்கு இங்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. அந்தவகையில் திட்டமிடப்பட்டுள்ளது

 

பழனி அரசு மருத்துவமனையானது மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்பட்டு, ரூ.70.00 கோடி மதிப்பீட்டில் அனைத்து மருத்துவ வசதிகளும் கொண்ட மருத்துவமனையாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. மேல்கரைப்பட்டி ஊராட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் சாலை வசதி, குடிநீர் வசதி என ரூ.8 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேல்கரைப்பட்டி உயர்நிலைப்பள்ளியில் 5 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டடம் கட்ட ரூ.1.30 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. குடிநீர், சுகாதாரம், சாலை வசதி, தெருவிளக்கு வசதி, கல்வி, பேருந்து வசதி, உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், பொதுமக்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து அவற்றைச் செயல்படுத்தி வருகிறார்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'பாஜகவிற்கு ஜால்ரா அடிக்கும் அவசியம் அதிமுக தொண்டர்களுக்கு இல்லை'-புகழேந்தி பேட்டி

Published on 21/07/2024 | Edited on 21/07/2024
'AIADMK workers don't need to beat Jalra for BJP'-pugahendi interview

பாஜகவிற்கு ஜால்ரா அடித்து அவர்களின் கால்களில் விழக்கூடிய அவசியம் அதிமுக தொண்டர்களுக்கு இல்லை என அதிமுக ஒருங்கிணைப்பு குழு புகழேந்தி தெரிவித்துள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பு குழு பெங்களூர் புகழேந்தி  இன்று ஓசூர் சார் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அம்மா உணவகத்திற்கு வருகை தந்தார். இன்று ஜூலை 21 ஆம் தேதி அவரது பிறந்தநாள் என்பதால் அவரது ஆதரவாளர்கள் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்தவர்கள் அவருக்கு சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அவர் அம்மா உணவகத்தில் வழங்கப்பட்ட உணவை பெற்று உணவகத்தில் சாப்பிட்டார். அதேபோல் அவருடன் வந்த அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்தவர்களும் அங்கு உணவு உண்டனர்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புகழேந்தி பேசுகையில், 'தமிழகத்தில் காலை சிற்றுண்டியை துவக்கி வைத்த தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்தேன், பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்டம் ஆரம்பித்தார், எம்ஜிஆர் சத்துணவு வழங்கினார். அதனை மெருகூடியவர்  ஜெயலலிதா. அந்த வழியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அதை செய்தார்கள் என பாராட்டினேன். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக முதலமைச்சர் ஸ்டாலின் அம்மா உணவகத்திற்கு நேரில் சென்று 21 கோடி ரூபாயை மேம்பாட்டிற்காக ஒதுக்கியுள்ளார். இதனை பாராட்டுக்குரிய விஷயமாக நாங்கள் பார்க்கிறோம்.

எங்களை பொறுத்தவரையில் நல்லவைகளை செய்யும்போது பாராட்டுகிறோம். அது மக்களுக்கு எதிராக திரும்பும் போது அதனை எதிர்க்கிறோம், அந்த வகையில் 21 கோடி ரூபாயை அம்மா உணவகத்திற்கு ஒதுக்கிய முதலமைச்சரை மனப்பூர்வமாக பாராட்டுகிறோம் என தெரிவித்தார். 4 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி  அம்மா உணவகத்திற்கு எந்த நிதியையும் ஒதுக்கவில்லை, ஆட்சியில் இருந்தார், போனார், உணவு பொருள்களில் ஊழல் செய்தார் என வழக்கு தொடர்ந்தேன். வழக்கு மன்றத்தில் உள்ளது. இதுதான் அவரது சாதனை. எந்த நிதியையும் அம்மா உணவகத்திற்கு ஒதுக்காமல் ஏமாற்றி வந்தவர் எடப்பாடி பழனிசாமி. ஒதுக்கியவர் ஸ்டாலின் எனவே இரண்டையும் சொல்லியாக வேண்டும். ஜெயலிதாவை நினைவில் நிறுத்தி அவர்கள் நிதியை ஒதுக்கி இருக்கிறார்கள். இந்தத் திட்டத்தை மேலும் மேலும் வளர்ச்சியடைய செய்யுங்கள். பெரும் அளவில் பெருமை செய்யுங்கள்.இந்தத் திட்டம் தொடர பல கோடி ரூபாயை நிதி ஒதுக்கி அம்மா உணவகங்களை மேம்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

'AIADMK workers don't need to beat Jalra for BJP'-pugahendi interview

மின் கட்டண உயர்வு என்பது தொடர்ந்து காலம் காலமாக இருந்தாலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடியும் வரை மின்கட்டணம் உயர்த்தப்படவில்லை, ஆனால் தற்போது மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்பதை சுட்டிக் காட்ட வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமையாகும்,. அதனை அவர்கள் சுட்டிக் காட்டி உள்ளார்கள். முதலமைச்சர் அதனை பரிசீலனை செய்து மின் கட்டணத்தை குறைப்பதற்கு முடிவெடுத்தால் மக்களுக்கு நன்மையாக இருக்கும் என்றார். மத்திய அரசுடன் இணக்கமாக இல்லை என்றால் மத்திய அரசு தமிழகத்திற்கு எதையும் செய்யாதா, பிரதமர் மோடி எதையும் செய்ய மாட்டாரா, பாரதப் பிரதமரின் நாற்காலி ஆட்டத்தில் உள்ளது. அது நிரந்தரமான நாற்காலியாக இல்லை, 60 சீட்டுகள் தான் வித்தியாசமாக உள்ளது. மத்திய அரசின் ஆட்சி நிதீஷ்குமார் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் கையில் உள்ளது. எப்பொழுது வேண்டுமானாலும் அந்த நாற்காலியை அவர்கள் தள்ளி விடுவார்கள் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவேன் என துடித்த பிரதமருக்கு கிடைத்த நீதி தான் தற்போது முடிந்த தேர்தல், 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல, எதிர்க்கட்சிகள் வலுப்பெற்றுள்ளது. ஜனநாயகம் தலைத்தோங்கி உள்ளது.

பிரதமரும் பாரதிய ஜனதா கட்சியும் நினைத்ததை செய்ய முடியாது. அது நடக்கவே நடக்காது என்ற நிலைப்பாடு இப்போது எழுந்துள்ளது. நாங்கள் அதிமுக கொடி பிடித்து அம்மாவின் புகழை சொல்லி வளர்ந்தவர்கள் நாங்கள் பாஜக மற்றும் மோடி அவர்களை ஒரு கட்சியாக பார்க்கிறோம், ஆனால் ஜால்ரா அடித்து அவர்களின் கால்களில் விழக்கூடிய அவசியம் அதிமுக தொண்டர்களுக்கு இல்லை என தெரிவித்தார்.

Next Story

மத்திய பட்ஜெட் - 2024; திட்டங்களைப் பட்டியலிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Published on 21/07/2024 | Edited on 21/07/2024
CM MK Stalin listed the projects for Union Budget 2024

18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த ஜுன் மாதம் 24 ஆம் தேதி (24.06.2024) காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரையொட்டி மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மக்களவை சபாநாயகர் தேர்தல் ஜூன் 26 ஆம் தேதி (26.06.2024) நடைபெற்றது. இதில் பாஜகவின் ஓம் பிர்லா, காங்கிரசின் கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார்.

இதனையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜூன் 27 ஆம் தேதி (27.06.2024) உரையாற்றினார். இதனையொட்டி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு மக்களவை உறுப்பினர்கள்  பலரும் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பிரதமர் மோடி கடந்த 2 ஆம் தேதி (02.07.2024) பதில் அளித்துப் பேசினார். அதன் தொடர்ச்சியாக குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. 

CM MK Stalin listed the projects for Union Budget 2024

இத்தகைய சூழலில் தான் மக்களவை கூட்டத்தொடரின் முதல் அமர்வைத் தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்திருந்தார். முன்னதாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான பிப்ரவரி 1 ஆம் தேதி (01.02.2024) மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், இந்த ஆண்டு ஆறாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். அதே சமயம் மக்களவைத் தேர்தல் நடைபெற இருந்த காரணத்தால் முழு பட்ஜெட்டாக இல்லாமல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இத்தகைய சூழலில் தான் 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மறுநாள் (23.07.2024) தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில் நிறைய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளன. இந்நிலையில் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு இடம் பெற வேண்டிய திட்டங்கள் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பட்டியலிட்டுள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள 2024 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். 

CM MK Stalin listed the projects for Union Budget 2024

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல் தர வேண்டும். பத்தாண்டுகளாக வருமான வரிச் சுமை குறைக்கப்படும் என்பது நடுத்தரக் குடும்பங்களின் எதிர்பார்ப்பு ஆகும். கோவை மற்றும் மதுரை மெட்ரோ இரயில் திட்டங்களுக்கான ஒப்புதல் தர வேண்டும். தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திடப் போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்துதல் வேண்டும் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு நிறைவு செய்யும் என்று நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.