Skip to main content

“தேர்ச்சி பெற்றால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்” - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Published on 26/06/2023 | Edited on 26/06/2023

 

all castes can become priests Madras High Court Order
கோப்புப்படம்

 

கோயில்களில் ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றவர்களை அர்ச்சகர்களாக நியமிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

 

கடந்த 2018 ஆம் ஆண்டு சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் நியமனத்திற்காக விண்ணப்பங்களை வரவேற்று கோயில் நிர்வாக அதிகாரி உத்தரவினை பிறப்பித்திருந்தார். ஆனால் இந்த உத்தரவினை எதிர்த்து சுகவனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகராக இருக்கக்கூடிய சுப்ரமணிய குருக்கள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

 

தொடர்ந்து நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த இந்த வழக்கு, இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, “ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றவரை அர்ச்சகராக நியமிக்கலாம். தேர்ச்சி பெற்றவரை அர்ச்சகர்களாக கோயில் தக்கார்கள் நியமிக்கலாம். ஆகமத்தைக் கண்டறிய அமைக்கப்பட்ட குழு அறிக்கை அளிக்கும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. அந்தந்த கோயில்களில் பின்பற்றப்படும் ஆகமத்தில் தேர்ச்சி பெற்றவரை நியமிக்கலாம். ஒருவேளை ஆகமத்தைப் பின்பற்றாத கோயில்களில் ஆகமத்தைப் படிக்காதவர்களை அர்ச்சகராக நியமிக்கலாம்” என்று உத்தரவிட்டுள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து வழக்கின் அரசு தரப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “ஆகமத்தை கண்டறிய அமைக்கப்பட்ட குழு அறிக்கை அளிப்பதற்குள் எப்படி அர்ச்சகர்களை நியமிக்க முடியும் உள்ளிட்ட 3 வாதங்களை எதிர் தரப்பினர் முன்வைத்தனர். பின்பு எங்கள் தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, பிறப்பின் அடிப்படையில் பாரபட்சம் இல்லாமல்,  ஆகமம் கற்றுத் தேர்ச்சி பெற்றால் கோயிலில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று ஒரு முக்கியமான தீர்ப்பை அளித்துள்ளனர்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜய் பட நடிகரின் வித்தியாசமான கிஃப்ட் - கல்யாணத்தில் கலகலப்பு

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
actor benjamin gift garlic to new married couples

வெற்றிக் கொடி கட்டு, ஆட்டோகிராஃப், திருப்பாச்சி உள்ளிட்ட பல படங்களில் காமெடி கதாபாத்திரம் மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் பெஞ்சமின். கடைசியாக கடந்த ஆண்டு வெளியான மெய்ப்படச் செய் என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் சேலத்தில் நடந்த திருமண நிகழ்வில் நடிகர் பெஞ்சமின் கலந்து கொண்டுள்ளார். அப்போது மணமக்களுக்கு பூண்டால் கட்டப்பட்ட மாலை மற்றும் 2 கிலோ பூண்டு அடங்கிய பூங்கொத்து ஆகியவைகளை கொடுத்து வாழ்த்தினார். அவரோடு நடிகர் முகமது காசிம் என்ற நடிகரும் சென்றுள்ளார். இவர்களின் பரிசைப் பார்த்து மணமக்கள் புன்னகைத்து வாங்கிக் கொண்டனர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. பூண்டின் விலை கடந்த டிசம்பர் மாதம் முதல் உயரத் தொடங்கியது. கடந்த சில தினங்களாக 1 கிலோ பூண்டு ரூ.500 முதல் ரூ.550 வரை விற்கப்பட்டு வருகிறது  என்பது குறிப்பிடத்தக்கது.  

Next Story

மேட்டூர் அருகே இருதரப்பினர் மோதல்; போலீஸ் குவிப்பு

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
Clash between two sides near Mettur; police presence

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே இரு தரப்பினர் மோதிக் கொண்டதால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் காவேரிபுரம் என்ற பகுதியில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் இஸ்லாமியர்கள் தகன பூமி ஒன்று உள்ளது. இந்த நிலப்பரப்பிற்கு அருகே பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் பலர் வசித்து வரும் நிலையில், தங்கள் குடியிருப்பு அருகே உடல்களை அடக்கம் செய்யக்கூடாது எனத் தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று அங்கு சடலம் ஒன்று புதைப்பதற்காக எடுத்து வரப்பட்ட நிலையில், அதைத் தடுத்து நிறுத்திய பொதுமக்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றனர். மேலும் அந்த பகுதி மக்கள் உடனடியாக இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும் எனக் கேட்டு சாலை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.