Skip to main content

“அவனோட அப்பா மனநோயாளி; குடும்பத்த பார்க்க கூட ஆள் இல்ல”- உயிரிழந்த அஜித் ரசிகரின் உறவினர் கண்ணீர் மல்க பேட்டி

Published on 11/01/2023 | Edited on 11/01/2023

 

Ajith fan's tragedy case relative interview

 

தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களாகத் திகழும் விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் 9 வருடங்கள் கழித்து ஒரே தேதியில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இதனால் அவர்களது ரசிகர்களைத் தாண்டி ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகின் பார்வையும் தற்போது 'வாரிசு' மற்றும் 'துணிவு'  படங்களை நோக்கி உள்ளது. 

 

இருவரின் ரசிகர்களும், அவர்களது விருப்ப நடிகர்களின் படங்கள் தனித்தனியே வெளியானாலே பேனர், பட்டாசு என்று திருவிழாவாகவே மாற்றிவிடுவார்கள். இப்போது இருவரின் படங்களும் பொங்கலை முன்னிட்டு ஒன்றாக வெளியாகியுள்ளதால், திரையரங்கம் மற்றும் முக்கியமான பகுதிகளில் பார்க்கும் இடமெல்லாம் பேனர், போஸ்டர், பட்டாசு என்று போட்டிப் போட்டு கொண்டாடி வருகின்றனர். அதன்படி அஜித்தின் துணிவு படம் அதிகாலை 1 மணிக்கும், விஜய்யின் வாரிசு படம் அதிகாலை 4 மணிக்கும் சிறப்புக் காட்சிகளாகத் திரையிடப்பட்டது. இரு படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனிடையே ரசிகர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் விஜய் மற்றும் அஜித் பேனர்கள் கிழிக்கப்பட்டதும், திரையரங்கு கண்ணாடிகள் உடைக்கப்பட்டதுமான சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. 

 

இந்நிலையில், துணிவு படக் கொண்டாட்டத்தின் போது அஜித் ரசிகர் பரத்குமார் என்பவர் உயிரிழந்துள்ளார். சென்னை ரோகிணி திரையரங்கம் முன்பு சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி மீது ஏறி பரத்குமார் நடனமாடிய போது கீழே விழுந்துள்ளார். படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

இதுகுறித்து பரத்குமாரின் உறவினர் (அத்தை) செய்தியாளர்களைச் சந்தித்தார், “என் பையன் கஷ்டப்படுபவன் தான். என் அண்ணன் மகன். வேலையை முடித்துவிட்டு அஜித் படம் பார்க்க வந்தான். அப்பொழுது இப்படி ஆகிவிட்டது. நீங்கள் எவ்வளவு பெரிய ரசிகராக வேண்டுமானாலும் இருங்கள். கொஞ்சம் குடும்பத்தைப் பாருங்கள். இப்பொழுது இவன் போய்விட்டான். இவன் குடும்பத்தைப் பார்க்க ஆள் கிடையாது. 

 

அவன் அம்மா வீட்டு வேலை செய்கிறார். அவரது தந்தை மனநோயாளி. அவன் குடும்பத்தை யார் பார்ப்பார். நான் என் கணவனை இழந்துவிட்டேன். என் வீட்டுக்காரர் கூட விஜய் ரசிகர் தான். இப்பொழுது எங்களுக்கு யாரும் வந்து சோறு போடவில்லை. நான் வீட்டு வேலை செய்து, நானே என்னை பார்த்துக்கொள்கிறேன். 

 

எல்லா வயசுப் பசங்களும் உங்க அம்மா, அப்பா, உங்களுடன் பிறந்தவர்களை நினைத்துப் பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு எந்த நடிகர்களும் பெரிதாகத் தோன்ற மாட்டார்கள். உங்க அப்பாக்கு ரசிகராக இருங்கள். உங்கள் அம்மாவை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்” என வருத்தம் கலந்த ஆதங்கத்துடன் கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

துணிவு பட நடிகர் மறைவு - திரையுலகினர் இரங்கல்

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
thunivu movie actor Rituraj Singh passed away

சின்னத்திரையில் பல்வேறு இந்து தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரிதுராஜ் சிங். தொடர்கள் மட்டுமல்லாது சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான துணிவு படத்தில் நடித்திருந்தார். 

சமீபத்தில் வயிற்றில் சில பிரச்சனைகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சில நாட்களுக்கு முன்பு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில் இன்று (20.02.2024) நள்ளிரவு 12.30 மணிக்கு மாரடைப்பு காரணமாக இறந்துள்ளார். அவருக்கு வயது 59. ஒரு மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கின்றன. 

இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Next Story

விபத்தில் காலமான ரசிகர் - வீட்டிற்கு சென்று சூர்யா அஞ்சலி

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
suriya paid tribute to his fan passed away

சூர்யா தற்போது தனது 42வது படமான ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படம் வருகிற ஏப்ரலில் இப்படம் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து தனது 43வது படத்திற்காக சுதா கொங்கராவுடன் கூட்டணி வைத்துள்ளார். இம்மாத இறுதியில் மதுரையில் உள்ள கல்லூரியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தாணு தயாரிப்பில் வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படம் கைவசம் வைத்துள்ளார். இதனிடையே இந்தியில் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் ‘கர்ணா’ படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

திரைப்படங்களை தாண்டி தனது ரசிகர்கள் அல்லது ரசிகர் மன்றத்தில் இருப்பவர்கள் யாரேனும் மறைந்தால் அவர்களுக்காக அஞ்சலி செலுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார் சூர்யா. கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்காவில், வணிக வளாகம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடந்த நிலையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண் இறந்துள்ளார். இவர் தீவிர சூர்யா ரசிகர் எனத் தெரிய வந்துள்ளதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தாருக்கு தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்தார். மேலும் ஐஸ்வர்யாவின் புகைப்படத்தைச் சென்னையில் உள்ள தனது வீட்டில் வைத்து அஞ்சலி செலுத்தினார் சூர்யா.

அதே போல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சூர்யாவின் பிறந்தநாளை ஒட்டி ஆந்திர மாநிலம் நாசராவ் பேட்டையில் கல்லூரி மாணவர்களான வெங்கடேஷ், சாய் ஆகிய இருவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சூர்யாவின் பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு வீடியோ கால் மூலம் சூர்யா தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கான தேவைகளை செய்து தருவதாக உறுதியளித்தார். இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பரில் சென்னையை அடுத்த எண்ணூர் பகுதியை சேர்ந்த அரவிந்த் என்ற இளைஞர் சாலை விபத்தில் உயிரழந்தார். இவர் தீவிர சூர்யா ரசிகராகவும் சூர்யாவின் ரசிகர் மன்றத்திலும் உறுப்பினராகவும் இருந்துள்ளதையறிந்த சூர்யா எண்ணூரில் உள்ள அந்த ரசிகரின் இல்லத்திற்குச் சென்று அவரது புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சூர்யா நற்பணி இயக்கத்தின் மாவட்ட தலைவரான மணிகண்டன் கடந்த 7ஆம் தேதி சாலை விபத்தில் மறைந்துள்ளார். இதனால் அவரின் வீட்டிற்குச் சென்ற சூர்யா, மணிகண்டன் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு, அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.