Skip to main content

தேர்வு எழுதாமல் தேர்ச்சியா?? அரியர் தேர்வு ரத்து குறித்து உயர்நீதிமன்றம் கருத்து...

Published on 08/10/2020 | Edited on 08/10/2020

 

aicte chennai high court students

 

 

அரியர் தேர்வு ரத்து விவகாரத்தில், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் விதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என, சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

 

கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு, இறுதிப்பருவத்தேர்வு தவிர, மற்ற பருவத் தேர்வுகளை ரத்து செய்வதாக அரசு அறிவித்துள்ளது. அதுபோல, அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அரியர் தேர்வை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

 

இந்த வழக்குகளுக்கு பதிலளித்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில், அரியர் தேர்வு ரத்து என்பது அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு முரணானது எனத் தெரிவித்திருந்தது.

 

இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என, பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.  அதுபோல்,  அரசின் உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்து, இந்த வழக்கில் தங்களையும்  இணைத்துக் கொள்ள வேண்டும் என சில மாணவர்கள் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.

 

இதைக்கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழு கவுன்சிலின் விதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது. அரியர் தேர்வு ரத்து செய்ததற்கு ஆதரவாக வழக்கு தொடரும் மாணவர்களின் மொத்த அரியர் எண்ணிக்கை குறித்தும், 10-ம் வகுப்பு முதல் அவர்களின் கல்வி விவரங்கள் பற்றியும் கேட்கப்படும். ஏற்கனவே,சொமோட்டோ உள்ளிட்ட ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களில், இன்ஜினியரிங் படித்தவர்களே பணியாற்றுகின்றனர். தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற வேண்டும் என மாணவர்கள் எப்படி எதிர்பார்க்கலாம் எனக் கேள்வி எழுப்பி, இந்த வழக்கின் விசாரணையை, வரும் நவம்பர் 20- ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்