அதிமுக - பாஜக இடையே கூட்டணியில் முறிவு ஏற்பட்ட நிலையில், பாஜக உடனான கூட்டணி குறித்து தனது அணி நிர்வாகிகளுடன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த வைத்திலிங்கம், பண்ருட்டி ராமச்சந்திரன், மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ், புகழேந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு ஓ. பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில், “கடந்த ஒருமாத காலமாக மத்திய பாஜக தலைமையில் இருந்து தினந்தோறும் எங்களிடம் தொடர்பு கொண்டுதான் இருக்கிறார்கள். தேசிய அளவில் கட்சியை நடத்திக் கொண்டிருப்பவர்கள் தான் இந்தியாவை ஆள முடியும் என்ற சூழல் உள்ளது. பாஜக 2 முறை ஆட்சி செய்திருக்கிறது. 3வது முறையும் ஆட்சி செய்கின்ற தகுதியையும் பெற்றுள்ளது. அதிகாரப்பூர்வமாக பாஜக தங்கள் நிலைப்பாட்டை அறிவித்த பின்னர் எங்கள் நிலைப்பாட்டை அறிவிப்போம். பாஜக மாநிலத் தலைவரை மாற்றச் சொல்ல எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தகுதி இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி பாஜகவுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார்” எனத் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்கள் ஓபிஎஸ்ஸிடம் ''சார் மீண்டும் பழசெல்லாம் மறந்து அதிமுக ஒன்றிணைய வாய்ப்பிருக்கிறதா'' என கேள்வி எழுப்பினர். அதற்கு ''நாங்கள் அதிமுக ஒன்றுபட்டதால் வெற்றி என சொல்லிவருகிறோம். ஆனால் எடப்பாடி பழனிசாமி முடியாது முடியாது என சொல்லி இதுவரை 10 தோல்விகள் ஆகிவிட்டது'' என ஓபிஎஸ் சொல்லிக்கொண்டிருந்த பொழுது திடீரென ஓபிஎஸ் காதில் ஓதிய வைத்தியலிங்கம், பின்னர் செய்தியாளர்களை பார்த்து ''எங்களுடைய கணிப்பு எடப்பாடியை தவிர்த்து அதிமுக ஓபிஎஸ் தலைமையில் ஒன்றிணையும், கூடிய சீக்கிரத்தில். அது எங்களுடைய கணிப்பு'' என்றார்.