திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியை ஆளுங்கட்சியான திமுக கைப்பற்றியதன் மூலம் சட்டமன்ற உறுப்பினராக காந்திராஜன் இருந்து வருகிறார். அதுபோல் தொகுதியில் உள்ள மூன்று ஒன்றியத்தில் குஜிலியம் பாறை ஒன்றியத்தை ஆளுங்கட்சி தக்க வைத்தது. மீதியுள்ள வடமதுரை, வேடசந்தூர் ஒன்றியத்தை எதிர்க்கட்சியான அதிமுக தக்க வைத்திருந்தது.
இந்நிலையில் வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 15 கவுன்சிலர்களில் ஆறு கவுன்சிலர்கள் ஆளுங்கட்சி திமுக தக்கவைத்து இருந்தது. மீதியுள்ள ஒன்பது ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை எதிர்க்கட்சியான அதிமுக கைப்பற்றியதின் மூலம் அதிமுகவைச் சேர்ந்த சாவித்திரி சுப்பிரமணி ஒன்றிய பெருந்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்படி இருந்தும் அவர் மீது அதிமுக கவுன்சிலர்களே கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தனர்.
இதனால் 13 ஒன் றிய கவுன்சிலர்கள் ஆதரவோடு பெரும்பான்மை பலத்துடன் திமுகவை சேர்ந்த சௌடீஸ்வரி கோவிந்தன் ஒன்றிய பெருந்தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதில் அதிமுக சேர்ந்த ஆறு ஒன்றிய கவுன்சிலர்கள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டனர் என்று கூறி அவர்களை கட்சி அடிப்படை உறுப்பினர் இருந்து நீக்கப்பட்டனர்.
இதனால் அதிமுக தலைமை மேல் அதிருப்தி அடைந்த ஒன்றிய கவுன்சிலர்களான மாரம்பாடி தேவசகாயம், சித்தூர் காளிமுத்து, புதுரோடு பார்த்திபன், விருதலைப்பட்டி ஜானகி, குட்டம் புஷ்ப வல்லி, கோவிலூர் சத்யபிரியா ஆகிய ஆறு கவுன்சிலர்கள் ஆளுங்கட்சியான திமுகவில் இணைய முன்வந்தனர். இந்த விஷயம் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் மற்றும் வேடசந்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா சாமிநாதன், வடக்கு ஒன்றிய செயலாளர் கவிதா பார்த்திபன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர் ஆகியோருக்கு தெரியவே உடனே அந்த ஆறு கவுன்சிலர்களையும் திமுகவில் சேர்க்க முடிவு செய்தனர்.
அதைத்தொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் முன்னிலையில் ஆறு அதிமுக ஒன்றிய கவுன்சிலர்களும் திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு அமைச்சர்கள் கட்சித் துண்டுகளையும் சாவுகளையும் அணிவித்து கட்சியில் இணைத்துக் கொண்டனர்.