விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கடந்த 2019 ஆண்டு ஜனவரி மாதம் 8-ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. 2019 ஆண்டு நவம்பர் 24-ம் தேதி முதல் கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் கள்ளக்குறிச்சியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைகூட வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.
ஆட்சியர் அலுவலகம் அமைக்க கள்ளக்குறிச்சி அருகே வீரசோழபுரம் என்ற கிராமத்தில் 40 ஏக்கர் 18 சென்ட் இடம் தேர்வு செய்யப்பட்டது. இங்கு ஆட்சியர் அலுவலகம், அரசு அதிகாரிகள் குடியிருப்பு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகம் அடங்கிய பெருந்திட்ட வளாகமாக அமைக்க அப்போதைய அதிமுக அரசு இடத்தை தேர்வு செய்தது. மேலும் வீரசோழபுரம் கிராமத்தில் 40.18 ஏக்கர் பரப்பளவில் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த ஆட்சியர் வளாகம் அமைக்க ரூ.104.44 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுச் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அந்த வீரசோழபுரம் பகுதியில் கோவில் இடத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க எதிர்ப்பு எழுந்தது. பல்வேறு அமைப்புகள் மற்றும் பல்வேறு தரப்பினர் அந்த பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க கூடாது என நீதிமன்றத்திற்கு சென்றனர். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த வழக்கை விசாரணை மேற்கொண்டு அந்த இடத்தில் கட்டிடம் கட்ட அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்து. மேலும் கோவில் இடத்தில் கட்டுவதால் அந்த இடத்தை குத்தகைக்கு எடுத்து வீரசோழபுரத்தில் உள்ள சிவன் புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிக்காக வாடகை செலுத்தவும் உத்தரவு பிறப்பித்தது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு ரூ.139.41 நிதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் விடப்பட்டது. இந்த நிலையில், இன்று அதே இடத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மற்றும் திமுக மாவட்டச் செயலாளர்கள் வசந்தம் கார்த்திகேயன் எம் எல் ஏ, உதயசூரியன் எம்எல்ஏ, கள்ளக்குறிச்சி எம்பி மலையரசன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அடிக்கல் நாட்டு விழாவிற்கு கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ செந்தில்குமாருக்கு முறையான அழைப்பு கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டிடத்தை நான்கு ஆண்டுகளாக முடக்கப்படு, பின்பு பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தற்போது மீண்டும் அதே இடத்தில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. அதில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. செந்தில்குமாரை அழைக்காமல் புறக்கணித்தது ஏன் என்று அதிகாரிகளிடம் அதிமுகவினர் சரமாரி கேள்வி எழுப்பினர்.
மேலும், அரசுத் திட்டங்கள் அரசு அலுவலகங்கள் திறப்பு விழா மற்றும் கட்டிடங்கள் அடிக்கல் நாட்டு விழாவிற்கு இனி கட்சி வித்தியாசம் பாராமல் எம்.எல்.ஏ.வை அழைக்கவில்லை என்றால் கடும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.