சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் உள்ளது விழுப்புரம். இந்த நகரில் உள்ள நான்கு முனை சந்திப்பில் சாலையோரமாக பல்வேறு அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று காலை அதிமுக தெற்கு, வடக்கு நகர செயலாளர்கள் பசுபதி, ராமதாஸ் ஆகியோர் தலைமையில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் அந்த இடத்தில் கொடிக்கம்பம் நடுவதற்கு ஏற்பாடு செய்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உரிய அனுமதி பெறாமல் கொடிக்கம்பம் நடக்கூடாது என்று தடுத்து நிறுத்தினர்.
இதனால் கோபமடைந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் எந்த அனுமதியும் இல்லாமல் இந்த இடத்தில் நிறுவப்பட்டுள்ளன. அப்படி இருக்கும் போது எங்களை மட்டும் அனுமதி வாங்கி வந்து கொடிக்கம்பம் நடுமாறு கூறுவது ஏன்? என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இதற்கு அனுமதி அளிக்கும் அதிகாரம் படைத்த கோட்டாட்சியர் இங்கே நேரில் வந்து எங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் இங்கிருந்து நகர மாட்டோம் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் அதிமுக நிர்வாகிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் கோட்டாட்சியர் ரவிச்சந்திரனிடம் மனு கொடுத்தனர். கோட்டாட்சியர் இது குறித்து ஆய்வு செய்து பிறகு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்தார். அதுவரை அமைதியாக இருக்குமாறு கூறி அதிமுகவினரை அனுப்பி வைத்தார்.
இதையடுத்து பாமக மாவட்ட செயலாளர் தங்க ஜோதி, தேமுதிக நகர செயலாளர் மணிகண்டன் போன்றவர்கள் அதே இடத்தில் கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதி தருமாறு கோட்டாட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். இந்த பரபரப்பான சம்பவம் காரணமாக சுமார் அரை மணி நேரம் நான்கு முனை சந்திப்பில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த இடத்தில் யாரும் அனுமதி பெறாமல் கொடிக்கம்பம் நடக்கூடாது என்பதற்காக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொடிக்கம்பம் நடும் பிரச்சனை விழுப்புரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.