திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் ஆத்துமேடு அண்ணா திடலில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான நேற்று (06.12.2021) மசூதி இடிப்பு விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்புப் பேச்சாளராக நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டு பேசினார்.
அதன்பின் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்குப் பதிலளித்த அவர், “இந்தப் பதவிக்கு யாராவது போட்டியிடுவார்களா? உலகத்தில் இல்லாத பதவி; திராவிட இயக்கம் தி.க., திமுக, அண்ணா திமுக அப்படின்னு சொன்னாலே பொதுச்செயலாளர்கள், ஜென்ரல் செகரெட்டரிதான் திராவிட இயக்கத்தினுடைய பேட்டர்ண். ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என்ற ஒன்றே கிடையாது. இல்லாத பதவிக்கு யாரும் போட்டியிட மாட்டார்கள்.
டெல்லியில் தேர்தல் ஆணையமும், பி.ஜே.பி.யும் இன்றைக்கு அவர்களைத் (அதிமுகவை) தக்கவைத்துக்கொள்வதற்கு இந்த எடுபிடிகளுக்குக் கொடுத்திருக்கிற சன்மானம். ஒருங்கிணைப்பாளர் பதவியை அண்ணா திமுக தொண்டர்கள் விரும்பவில்லை. அதனால்தான் போட்டியிடவில்லை.
அண்ணா திமுக, மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒரு அமைப்பு. இன்றைக்கு ஆதாய சூதாடிகளின் கையில், அதிகாரத் தரகர்களின் கையில் அகப்பட்டுக்கொண்டு அந்த கட்சி தன்னுடைய ஆன்மாவை இழந்துவிட்டது. அதனால் இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி டம்மி போஸ்ட். இதை யாரும் மதிக்கவே மாட்டாங்க; தூக்கவும் மாட்டாங்க. இது ஒருநாள் செய்திதானே தவிர, இதற்குப் பின்னால் எந்த சரித்திரம் இருப்பதாக நான் கருதவில்லை.
என்னுடைய தமிழ் சினிமாவுக்கு ஒருநாள் உலக அங்கீகாரம் கிடைக்குமானால், அதை வாங்கித் தருகிற வல்லமையுள்ள கலைஞன் கமல்ஹாசன். அவருடைய வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு ஒரு கட்சியைத் தொடங்கியது. அதற்குப் பிறகு அவர் செய்த தவறு தேர்தலில் போட்டியிட்டது. அதை அவர் திரும்பிப் பார்ப்பார் என்றுதான் கருதுகிறேன். அவர், கரோனா பெருந்தொற்றில் பாதிக்கப்பட்ட செய்தியை அறிந்து மிகுந்த கவலை அடைந்தேன். அவர் நலம் பெற்று வந்ததற்கு நன்றியைத் தெரிவிக்கிறேன்” என்று கூறினார்.