Skip to main content

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.விடமே லஞ்சம் கேட்கும் அதிகாரிகள்!

Published on 11/07/2018 | Edited on 11/07/2018
manu


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில், முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.எம்.துரை பட்டா கேட்டு விண்ணப்பித்த போது, அதிகாரிகள் அவரிடம் ரூ.30ஆயிரம் வரை லஞ்சம் கேட்டதாக திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வினயிடம் புகார் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட ஆத்தூர் தாலுகா (வட்டாட்சியர்) அலுவலகம் உள்ளது. கடந்த 2 வருடங்களாக ஆத்தூர் தாலுகா அலுவலகத்திற்கு உட்பட்ட சின்னாளபட்டி, சித்தையன்கோட்டை, அய்யம்பாளையம் மற்றும் காந்திகிராமம், செட்டியபட்டி, அக்கரைப்பட்டி, பாறைப்பட்டி, ஆத்தூர், அம்பாத்துரை, சீவல்சரகு, போடிக்காமன்வாடி, பாளையங்கோட்டை, சித்தரேவு, வக்கம்பட்டி, முன்னிலைக்கோட்டை, மணலூர் (மலைகிராமம்), பித்தளைப்பட்டி, என்.பஞ்சம்பட்டி, கலிக்கம்பட்டி ஆகிய கிராம மக்கள் வாரிசு சான்றிதழ் மற்றும் பட்டா கேட்டு விண்ணப்பித்தால் பல ஆயிரங்கள் கொடுத்தால் தான் சான்றிதழ்கள் கிடைக்கிறது. குறிப்பாக பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்கள் இறந்த பிறகு தான் அவர்களுக்கு பட்டாவே கிடைக்கிறது. அந்த அளவிற்கு பட்டா கேட்டு வரும் நபர்களை அலைக்கழிக்கின்றனர்.
 
Munnal MLA Durai
முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.எம்.துரை


ஆனால் 10ஆயிரம் முதல் 20ஆயிரம் வரை லஞ்சம் கொடுத்தால் உடனே பட்டா கிடைக்கிறது. இதுதவிர ரியல் எஸ்டேட் புள்ளிகள் மற்றும் தொழிலதிபர்கள் லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுப்பதால் மூன்று நாட்களில் அவர்களுக்கு பட்டா கிடைக்கிறது. கடந்த ஒரு வருட காலமாக சின்னாளபட்டியைச் சேர்ந்த நெசவாளர் வீரக்குமார் (அ.தி.மு.க. பிரமுகர்) ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் பட்டா கேட்டு வந்த வண்ணம் இருந்திருக்கிறார். ஆரம்பத்தில் 3ஆயிரம் முதல் 10ஆயிரம் வரை லஞ்சம் கேட்டு இருக்கிறார்கள். அவர் கொடுக்க மறுத்ததால் ஒரு வருடமாக இழுத்தடித்ததால் அ.தி.மு.க. கொடியுடன் தாலுகா அலுவலகம் உள்ளே சென்று தரையில் அமர்ந்து தர்ணா செய்தபின்பு ஒரு வாரத்தில் பட்டா கொடுப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதுபோக ஆத்தூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. (1991-1996) சின்னாளபட்டியைச் சேர்ந்த எஸ்.எம்.துரை என்பவர் அவரது வீட்டிற்கு பட்டா கேட்டு விண்ணப்பித்த போது 30ஆயிரம் வரை லஞ்சம் கேட்டுள்ளனர். அவர் கொடுக்க மறுக்கவே தாமதப்படுத்தி உள்ளனர். 9.7.18 அன்று மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர்க்கும் பிரிவிற்கு வந்த அவர் ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் நிலஅளவை பிரிவில் உள்ள வட்ட நிலஅளவை அதிகாரி (துணை வட்டாட்சியர்) சபரிராஜன் மற்றும் தலைமை நில அளவையர் விஜயராஜ் ஆகியோர் தன்னிடம் லஞ்சம் கேட்டதாக நேரடியாக புகார் செய்தார். இதுதவிர பட்டா கேட்டு வரும் பொதுமக்களிடம் புரோக்கர்கள் நேரடியாக சென்று தங்களிடம் கொடுத்தால்தான் மூன்று நாட்களில் பட்டா கிடைக்கும். அல்லது நேரடியாக சென்றால் பட்டா கிடைக்காது என மிரட்டியதாகவும் புகார் செய்தார்.
 

admk


ஆளுங்கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வே தாலுகா அலுவலகத்தில் தலைவிரித்தாடும் லஞ்சம் குறித்து புகார் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபோல பெருமாள்பட்டியைச் சேர்ந்த விவசாயிகளும் தனியார் ஆக்கிரமித்துள்ள நீர்வரத்து ஓடை புறம்போக்கை அளவீடு செய்ய மனுகொடுத்தால் லஞ்சம் கொடுத்தால் தான் வருவோம் என கூறியதாகவும் புகார் செய்தது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் வருவாய்த்துறை அமைச்சரும், தற்போது ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஐ.பெரியசாமி அவர்கள் வருவாய்த்துறை அமைச்சராக இருந்தபோது, சுமார் 50ஆயிரம் பேருக்கு மேல் ஒரு பைசா கூட லஞ்சம் வாங்காமல் பட்டா கொடுத்ததை தொகுதி மக்கள் பெருமையாக இன்றுவரை பேசுகிறார்கள். ஆனால் ஆளுங்கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.விடம் ஒரு பட்டாவிற்கு 30ஆயிரம் வரை லஞ்சம் கேட்டதை கண்டு பொதுமக்களே அதிர்ச்சி அடைந்துவிட்டனர். அதோடு நிலஅளவை பிரிவில் உள்ள லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை மாவட்ட கலெக்டர் கூண்டோடு மாற்ற வேண்டும் என பொதுமக்களும் வலியுறுத்தி வருகிறார்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்!

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
ADMK former MLAs joined BJP

இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் அரசியல் கட்சிகள் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளைக் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 14 பேர், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் மற்றும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஒருவர் என 19 பேர் டெல்லியில் மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தலைமையில் பாஜகவில் இன்று (07.02.2024) இணைந்தனர்.

அதன்படி முன்னாள் எம்.எல்.ஏ.க்களான கந்தசாமி, சின்னசாமி, துரைசாமி, சேலஞ்சர் துரை, ரத்தினம், கோமதி சீனிவாசன், எஸ்.எம். வாசன், சந்திரசேகர், ஜெயராமன், முத்து கிருஷ்ணன், அருள், தங்கராசு, குருநாதன், ராஜேந்திரன் மற்றும் பாலசுப்ரமணியன் உட்பட 19 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர். இந்நிகழ்வில் மத்திய இணையமைச்சர் எல். முருகன், முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story

தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ கு.க.செல்வம் காலமானார்

Published on 03/01/2024 | Edited on 03/01/2024
Former DMK MLA ku.ka.Selvam passed away

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுக தலைமை நிலைய அலுவலக செயலாளருமான கு.க.செல்வம் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (03-01-24) காலமானார். 

கடந்த 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின்பு, கடந்த 2021 ஆம் ஆண்டில் திமுக மீது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பா.ஜ.க.வில் இணைந்த கு.க.செல்வம், 2022ஆம் ஆண்டு மீண்டும் திமுக வில் இணைந்தார். அதன் பின்பு, அவர் திமுக தலைமை நிலைய அலுவலக செயலாளராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வந்த கு.க.செல்வம் இன்று (03-01-24) இன்று சிகிச்சை பலனின்று உயிரிழந்தார்.