Skip to main content

கடலூரில் வடகிழக்கு பருவமழை; வேளாண்துறை அமைச்சர் ஆய்வு

Published on 16/11/2023 | Edited on 16/11/2023

 

Agriculture Minister Survey of Northeast Monsoon in Cuddalore

 

கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வில்வ நகர் பகுதியில் உள்ள பெருமாள் குளத்தில் மழை நீர் வெளியேற்றும் பணிகள் மற்றும் அக்குளத்தினை தகுந்த வடிகால்களுடன் மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

 

அதே போல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடிகால் மற்றும் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தென்பெண்ணையாற்றின் நீர் வரத்தை பார்வையிட்டு அதன் அருகே நெடுஞ்சாலைத்துறை மற்றும் நீர்வளத்துறை மூலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைக்கப்பட்டிருந்த விளக்கப் புகைப்படத்தினை தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ்,  கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் உள்ளிட்டவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

 

இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் 24 மணி நேரமும் பேரிடர் தொடர்பான புகார்களைத் தெரிவிக்கும் வகையில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

 

இதுகுறித்து அமைச்சர் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் தற்போது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 23 சதவீதம் மழைப்பொழிவு குறைவாக உள்ளது.  வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  மாவட்டத்தில் மிக அதிகப்படியான பாதிக்கப்படக்கூடிய பகுதிகள், மிதமாக பாதிக்கப்படக்கூடிய பகுதிகள், குறைவாக பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் என கண்டறியப்பட்டு அப்பகுதிகளில் பேரிடரை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

 

பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை செய்வதற்கு அவசரக்கால முன்னறிவிப்பான் கருவிகள் தயார் நிலையில் உள்ளது. பேரிடர் காலங்களில் அலுவலர்களுக்கு இடையே தகவல் தொடர்பினை எளிதாக்கும் பொருட்டு, வாக்கி டாக்கி கருவிகள் வழங்கப்பட்டுள்ளது.  பொதுமக்கள் அவ்வப்போது பாதிப்புகள் குறித்து தகவலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 04142 - 220700, 233933 ஆகிய எண்களை 24 மணி நேரம் தொடர்பு கொள்ளலாம் என்றார். இவருடன் கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், கூடுதல் ஆட்சியர் சரண்யா உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

 


 

சார்ந்த செய்திகள்