40 ஆண்டுகளுக்கு பிறகு நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அக்டோபர் முதல் 10 ஆம் தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளது என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அன்று கப்பல் போக்குவரத்து தொடங்கமுடியாத நிலை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று (14.10.2023) தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடி, இன்று காலை 8.30 மணிக்கு டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் கப்பல் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெறும் விழாவில் மத்திய அமைச்சர் சர்பானந்தசோனாவால், தமிழக அமைச்சர் எ.வ. வேலு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இந்த கப்பலின் பயணக் கட்டணமாக 6 ஆயிரத்து 500 ரூபாயுடன் 18 சதவிதம் ஜிஎஸ்டியுடன் சேர்த்து 7 ஆயிரத்து 670 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல்நாளில் போதிய பயணிகள் வராததால், 75 சதவீத கட்டண சலுகையில் ரூ.2,375 ஜிஎஸ்டி 18 சதவீதம், ஸ்நாக்ஸ் என மொத்தமாக ரூ.2,803 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.