முன்னாள் அமைச்சரும், பெருந்துறை சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாச்சலத்திற்கு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட அ.தி.மு.க.சார்பில் சீட் கொடுக்காமல் ஜெயக்குமார் என்பவரை வேட்பாளராக நிறுத்தியது அ.தி.மு.க. தலைமை. இது தொகுதியில் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகள் தொண்டர்களுக்கே அதிர்ச்சியாக இருந்தது.
"எனக்கு சீட் வழங்க மறுத்ததற்கு என்ன காரணம்? அப்படி என்ன நான் தவறு செய்தேன்? மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவன் நான். பத்தாண்டு காலம் பெருந்துறை சட்டமன்றத் தொகுதி வளர்ச்சிக்காக நான் உழைத்துள்ளேன். கட்சிக்கு எதிராகச் செயல்பட்ட நபருக்கு சீட் கொடுப்பது எந்த வகையில் நியாயம்?" எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடமும் நியாயம் கேட்டார்" தோப்பு வெங்கடாசலம். ஆனால் அங்கிருந்து எந்தப் பதிலும் இல்லை.
இந்த நிலையில், தனது ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்திய தோப்பு வெங்கடாச்சலம் சுயேட்சையாகப் போட்டியிடுவது என்று முடிவு செய்து அறிவிக்கப்பட்ட அ.தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து, இன்று (18/03/2021) சுயேட்சையாக வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். பெருந்துறை நால்ரோட்டில் இருந்து ஆயிரக்கணக்கான தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக வந்த தோப்பு வெங்கடாச்சலம் பெருந்துறை வட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான இலாஹிஜானிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தோப்பு வெங்கடாச்சலம், "அ.தி.மு.க.வில் உழைத்தவர்களுக்கு வாய்ப்பு தராதது மனவேதனை அளிக்கிறது. என்னால் பயன் பெற்றவர்கள் என்னை நினைக்காமல் போகலாம். ஆனால், மக்கள் என் பணியை நினைத்துப் பாராட்டுகிறார்கள். 10 ஆண்டுகளில் இந்த தொகுதியில் அமைச்சராக, எம்.எல்.ஏ.வாக பணியாற்றி அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தந்துள்ளேன். வறட்சிப் பகுதியாக இருந்த இந்த தொகுதியில் குடிநீர்ப் பிரச்சனையை முழுமையாகத் தீர்த்து வைத்துள்ளேன். ஒரு எம்.எல்.ஏ. எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்துள்ளேன். தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்கள் செய்துள்ளதால், பொதுமக்களின் ஆதரவு நிச்சயம் எனக்குக் கிடைக்கும் என்பதால் சுயேட்சையாகப் போட்டியிட்டுள்ளேன்" என்றார்.
இந்த தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கே.கே.சி. பாலு என்பவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். அ.தி.மு.க. சார்பில் ஜெயக்குமாரும், சுயேச்சையாக தோப்பு வெங்கடாச்சலமும் களம் இறங்கியுள்ளதால் மும்முனைப் போட்டி நிலவுகிறது.